பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/746

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

744

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


அனுப்பினான். அப்போது அவன், “அம்மா! வஞ்சிமாநகரத்துக்கு இங்கிருந்து அதிக நாட்கள் பயணம் செய்யவேண்டும். கவனமாகப் போய்ச் சேருங்கள். நான் போர்க்களத்துக்குப் போய் போரைக் கவனிக்கிறேன். நல்வினை இருந்தால் மறுபடியும் சந்திப்போம்!” என்று மனங் கலங்கிக் கூறினான்.

“இராசசிம்மா! உனக்கு என் பயணத்தைப் பற்றிக் கவலை வேண்டாம்டவஞ்சிமாநகரப் பயணத்தைவிட நீண்ட வாழ்க்கைப் பயணத்தை நான் கண்டாயிற்று. இனிப்பயமில்லை. போய் வா! வெற்றியானால் வென்று வா. தோல்வியானால் எங்கேயாவது போய் மறுபடியும் வெற்றிக்கு முயற்சி செய்” என்று அவன் மனக்கலக்கத்தைத் தேற்றி வாழ்த்திவிட்டு நிம்மதியாக வஞ்சிமாநகரத்துக்குப் புறப்பட்டார் மகாராணி. தாயைத் தன்னிடமிருந்து பிரிக்கும் அந்தப் பல்லக்குப் போவதையே பார்த்துக்கொண்டு நின்ற குமாரபாண்டியன் அதன் தோற்றம் கண்பார்வையிலிருந்து மறைந்ததும் கண்ணில் துளிர்த்த நீர் முத்துக்களைத் துடைத்துக்கொண்டு திரும்பினான். நான்கு புறமும் விழிகள் பார்க்கமுடிந்த அளவு சுற்றிலும் பார்த்தான். மேலே வானத்தை அண்ணாந்து நோக்கினான். அந்தத் தென் பாண்டி நாடு, அதன் வளம், அதன் அழகு, அதன் செல்வங்கள், அதன் தெய்வத் திருக்கோவில்கள் எல்லாம் சூனியமாய்ப் பாழ் வெளியாய், ஒன்றுமற்ற பழம் பொய்களாகத் திடீரென்று மாறிவிட்டனபோலிருந்தது. தன் பெருமையையும், புகழையும் இளவரசன் என்ற பதவியையும் மறந்து எவனோ ஒரு பேதை இளைஞன் போல் நடந்தான் அவன்.


25. புதியதோர் பெரு வாழ்வு

மகாராணியை வஞ்சிமா நகரத்துக்குச் சிவிகை ஏற்றியனுப்பி விட்டுப் போர்க்களம் நோக்கிப் புறப்பட்ட குமாரபாண்டியன் நடு வழியிலேயே அந்தத் துன்பச் செய்தியைத் தெரிந்துகொண்டான். வேதனைப்படுகிற அளவுகூட அவன்