பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வேறே எங்கேயாவது வேலைக்குப்போக விருப்பம் இருந்தாலும் சரி, அதற்கு ஏற்பாடு செய்கிறேன். அது என் பொறுப்பு.”

அருணகிரி சில தினங்களில் கண்களை மூடிவிட்டான்.

டேவிட் சொக்கலிங்கத்தைக் கேட்டார், 'என்னுடன் இருந்து விடுகிறாயா' என்று. அவனுக்கு அதிலே விருப்பம் என்றாலும், அந்த ஊரில் இருந்தால் ஆப்பக் கடை அன்னத்தினால் பெருத்த தொல்லை விளையும் என்ற பயம் அவனை அந்த இடத்தை விட்டுச் சென்று விடவேண்டும் என்று தூண்டிவிட்டது.

பல ஆண்டுகளாகப் பிரிந்து இருந்தாலும், தகப்பனாரிடம் பாசம் இல்லாமல் போகுமா. அதிலும் அவர் வாழ்ந்து கெட்டவரென்பதையும், இப்போது வண்டிக்காரராக இருந்து வருகிறார் என்பதையும் எண்ணும்போது, இனி அவருடன் வாழ்ந்து வரவேண்டும் — தான் ஏதாவது வேலை தேடி அவரை நிம்மதியாக வாழ வைக்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாகி விட்டது.

“இனியாகிலும் மகன் வீட்டோடு வந்து சேரட்டுமே.. உள்ளதைக் கொண்டு குடும்பத்தை நடத்த முடியாதா — அவன் ஒருவன் வந்து சேருவதாலா, நமக்குப் பளுவு ஏறப்போகுது” என்று சொல்லும்போதே தன் தாயாரின் கண்கள் குளமானதையும் கண்டான். தகப்பனாருடன் ஊர் சென்று விடுவது என்று உறுதி பலப்பட்டுவிட்டது.

டேவிட் தடுக்கவில்லை. "நீ முன்னுக்கு வரவேண்டியவன், இங்கே அடைபட்டுக் கிடக்கத்தான் கூடாது. நான் கொடுக்கும் சிபாரிசுக் கடிதம் போதும். உனக்கு எங்கேயும் நல்ல வேலை கிடைக்கும். கணக்குத் துறையில் மேலும் படித்துப் பயிற்சி பெற்றால், ஏதாவது பெரிய கம்பெனிகளில் வேலை கிடைக்கும்." என்று டேவிட் உற்சாகமூட்டினார்.

அவருடைய சிபாரிசுக் கடிதத்தையும் வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டு, ஊர் திரும்ப ஏற்பாடு செய்து கொண்டனர்.