பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வண்டிக்காரனோட மகன் ஜெமீன் குழந்தைகளுக்கு வாத்தியாரா? கேவலம் கேவலம் என்று கூறுவார். அவருடைய சுபாவம் அப்படிப்பட்டது. அதனால் நீ என் மகன் என்பது தெரியவே கூடாது. அப்போதுதான் ஜெமீன் மாளிகையிலே உனக்கு அந்த வேலை கிடைக்கும்.”

சொக்கலிங்கம் அதிர்ச்சி அடைந்துவிட்டான், இந்த நிபந்தனையைக் கேட்டு. 'இதற்கு நான் சம்மதிக்கவே முடியாது, வேண்டுமென்றால் வேறு வேலை தேடிக் கொள்ளலாம், நீங்கள் என்னோடு வந்துவிடலாம்' என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டான்.

சடையப்பன் துளியும் கோபித்துக் கொள்ளவில்லை; முகத்திலே துக்கம்தான் தோய்ந்து இருந்தது.

மறுபடியும் மறுபடியும் அதனையே வலியுறுத்தலானான். அவனுடைய தழுதழுத்த குரலைக் கேட்டு சொக்கலிங்கம் உருகிவிட்டான்.

"இத்தனை வருஷங்கள் எங்களைப் பிரிந்து இருந்து வந்தாய். இன்னும் ஒரு இரண்டு மூன்று வருஷம் இருக்கக் கூடாதா அப்பா!" என்று கேட்டு விட்டுச் சடையப்பன், கண்களைக் கசக்கிக்கொண்டது கண்டு சொக்கலிங்கம் திடுக்கிட்டுப்போனான்.

“பிரிந்து இருப்பதைக் காட்டிலும் கொடுமையை அல்லவா அப்பா அனுபவிக்கச் சொல்லுகிறீர்கள். நீங்கள் என் அருகிலேயே இருப்பீர்கள்; ஆனால் இவர் என் அப்பா என்று நான் சொல்லக்கூடாது என்கிறீரே... தட்டு நிறைய தித்திப்புப் பண்டம் அடுக்கி எதிரே வைத்துவிட்டு, 'சாப்பிடக்கூடாது, பார்த்துக் கொண்டு மட்டுந்தான் இருக்கலாம்' என்கிறீர்களே!”

“பத்தியம் இருக்கச் சொல்கிறேன் மகனே! நாம் நோயாளிகள்; தரித்திரம் என்ற நோய்! கேவலமான வேலையைச் செய்து வருகிறேன். வண்டி ஓட்டிவிட்டு வீட்டுக்குப் போய் இருக்கும் வேலை கூட அல்லடா மகனே!