பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மணம் நுகர்கிறான் என்றுதான் எல்லோரும் கருதினர்; ஆனால் அவன் பட்ட வேதனை அவனுக்கல்லவா தெரியும்.

கூப்பிடு தூரத்தில் இருக்கிறார்கள் தாயும் தந்தையும்! ஆனால் வெளியே சொல்லிக் கொள்ள உரிமை இல்லை. தனக்குக் கிடைத்த வசதியான வாழ்க்கையிலே அவர்களுக்குப் பங்கு அளிக்க உரிமை இல்லை. பேசவே உரிமை இல்லை.

என்ன விலையுயர்ந்த முத்துமாலை மார்பிலே புரளுகிறது என்று ஊரே புகழ்கிறது; ஆனால் அந்த முத்துகள் ஒவ்வொன்றும் மார்பைத் துளைத்துக் கொண்டே இருக்குமானால், அந்த மாதரசியின் வேதனை எப்படி இருக்கும், பூமணம் நுகருகிறான் என்று ஊரார் பாராட்டுகிறார்கள். ஆனால், ஒவ்வொரு தடவையும் பூநாகம் கடித்தபடி இருந்தால் எப்படியிருக்கும். ஜெமீன் மாளிகைக்கு வருகிறவர்களிடமெல்லாம் ஜெமீன்தாரர் அறிமுகப்படுத்துகிறார். மகிழ்ச்சியுடன் பாராட்டுகிறார். ஆனால் பெற்ற தாயும் தந்தையும்? அவர்கள் குடிசையில் அல்லவா குமுறுகிறார்கள்! மகன் மாளிகையில்! அவர்கள் குதிரைக் கொட்டிலுக்கு அருகே! இதற்கா என்னை மகனாகப் பெற்றார்கள்?

எத்தனை இன்பம் கிடைத்தாலும், குதிரையை அவர் தேய்த்துக் கொண்டிருப்பதை ஒருகணம் பார்த்த உடன், இதயத்தில் ஆயிரம் தேள் அல்லவா கொட்டுகிறது.

'அப்பா!' 'வேண்டுமளவு பணம் எடுத்துக்கொள், செலவுக்கு' என்கிறார் ஜெமீன்தாரர்! விதவிதமான உடைகள்! வெல்வெட்டு மெத்தை! வகைவகையான உணவு! எல்லாம் எனக்கு! ஆனால் உங்களை நான் எந்தக் கோலத்தில் காண்கிறேன்? எப்படித் தாங்கிக் கொள்ள முடியும். தணலில் நிற்கிறேன்.

எல்லோரும் பாராட்டுகிறார்கள் என்னை. என் காதில் விழும்படி உன்னை ஏசுகிறார்களே! இதனைக் கேட்கவா எனக்குச் செவிகள்!! ஏனப்பா என்னை ஒரு சித்திரவதைக்கு ஆளாக்குகிறீர்கள்.