பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அடப்பாவிகளே! அவர் என் அப்பா! என்னை இவ்வளவு மதிப்பாக நடத்திக்கொண்டு என் அப்பாவை இவ்வளவு கேவலமாக நடத்துகிறீர்களே இது அடுக்குமா? என்று கூவிடத் தோன்றுகிறது, மாளிகை முழுவதும் அந்த ஒலி பரவவேண்டும்; இந்த ஊர் முழுவதும் கேட்கவேண்டும்; குன்றுகளலெல்லாம் பரவவேண்டும்... ஒரு வார்த்தை, ஒரு கை அசைவு, ஒரு கண் சிமிட்டுதல் போதும் அப்பா! ஓடோடி வந்து உம் பாதத்தில் விழுவேன், இந்த ஊர் அறியச் சொல்வேன், 'இவர் என் அப்பா! இதோ என் தாய்!' என்று.

சொக்கலிங்கம் இதுபோலெல்லாம் எண்ணி எண்ணி மிகுந்த வேதனையுற்றான்.

சடையப்பனும் அவன் மனைவியும் தங்கள் மனவேதனை துளியும் வெளியே தெரியாதபடி நடந்து கொண்டார்கள்.

யாரும் காணாதபோது சொக்கலிங்கத்தைத் தொலைவிலிருந்து பார்த்துப் பூரிப்படைவார்கள்.

வேலையாட்கள், அவன் புகழ் பாடக்கேட்டு இன்புறுவார்கள். திரும்பத் திரும்பச் சொல்லிக் கேட்பார்கள்.

எப்படியாவது யாருமறியாமல் தோட்டத்தில் உலவுவதுபோலச் சென்று பெற்றோரைக் கண்டு பேசி இதயத்துக்கு விருந்து பெற்றிடலாம் என்று புறப்பட்டாலோ, யாராவது ஒருவர் வந்துவிடுகிறார்கள் துணைக்கு என்று!

ஜெமீன் மாளிகையிலே அவன் வந்து சேர்ந்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆயிற்று. ஐந்தாறு தடவைகள் மட்டுமே பெற்றோரைச் சில விநாடிகள் தனியே கண்டு பேச முடிந்தது.

ஒவ்வொரு நாளும் தன் அறை ஜன்னல் வழியாக ஏக்கத்துடன் பார்க்கிறான், அந்தக் குடிசையை அங்குக் கோவில் கொண்டிருக்கும் தெய்வத்தை, கண்ணீரால் அபிஷேக்கிறான், இருக்குமிடத்தில் இருந்தபடியே!

அப்பா மெல்ல, தள்ளாடித் தள்ளாடி நடந்து வருகிறார்.

அம்மா, எதோ எடுத்துச் செல்கிறார்கள்!