பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

யாரோ அதட்டிக் கூப்பிடுவது கேட்டு, அவசரமாக நடக்கிறார் அப்பா!

மலர்களைப் பொறுக்குகிறார்கள் அம்மா...

பூஜைக்கா! இந்தப் பாவி வாழட்டும் என்றா பூஜை செய்கிறார்கள்;

இரவு முழுவதும் கண்ணீர்! பகலில் ஒரு போலி நாடகம்!

ஜெமீன் மாளிகையில் இடம் பெற்ற சின்னாட்களிலேயே சொக்கலிங்கம் எல்லோருடைய நன்மதிப்பையும் பெற்றுவிட்டான். டேவிட் தந்த பயிற்சி காரணமாக எவரிடமும் இனிய முகத்துடன் பழகவும் பேசவும், மற்றவர்களுக்கு உதவி செய்வதிலே ஆர்வம் காட்டவும் அடக்கமாக இருக்கவும் அதேபோது அடிமை மனப்போக்கைக் கொள்ளாமலும் நடந்து கொள்ள முடிந்தது.

செல்வச் சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட ஜெமீன்தாரரின் பெண்களுக்கு முதலில், ஒரு வாத்தியாருக்கு இவ்வளவு மதிப்பு அளித்திட ஜெமீன்தாரர் முனைந்தது வியப்பாக இருந்தது.

பெரிய பெரிய சங்கீத வித்வான்கள் சன்மானம் பெறுவார்கள், புலவர்கள் பொன்னாடை பெறுவார்கள், கூத்தியலார் புகழுரையும் பொற்பதக்கமும் பெறுவார்கள். ஆனால் இவர்களிலே யாருக்கும் கிடைக்காத ஒரு தனித்தன்மையான மதிப்பு பிள்ளைகளுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்க வந்த, ஊர் பேர் தெரியாத ஒரு இளைஞருக்குத் தரப்படுவதன் காரணம் தெரியாமல் வியப்புற்றனர். ஜெமீன்தாரரே அவ்விதம் நடந்து கொள்ளும்போது நாம் வேறுவிதமாக நடந்து கொள்ளக்கூடாது என்று ஜெமீன்தாரரின் குமாரிகள் கருதினர்.

மற்றோர் வியப்பும் அவர்களுக்கு ஏற்பட்டது. வேறு யாருக்கும் தரப்படாத மதிப்பு தரப்பட்ட போதிலும், எல்லாவிதமான வசதிகள் அளிக்கப்பட்ட போதிலும், சொக்கலிங்கம் முழு மகிழ்ச்சியுடன் இருப்பதுபோலத் தோன்றவில்லை.