உள்ளடக்கத்துக்குச் செல்

வரிவடிவச் சீரமைப்பு - பிற மொழியினர் செய்துள்ளனர்

விக்கிமூலம் இலிருந்து
(பயனர்:Vckulandaiswamy/புத்தகங்கள்/கட்டுரைகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வரிவடிவச் சீரமைப்பு - பிற மொழியினர் செய்துள்ளனர் தமிழ் வரிவடிவச் சீரமைப்பு: பேரறிஞர்கள் ஏற்றுள்ளனர்

[தொகு]

டாக்டர் வா. செ. குழந்தைசாமி

தமிழ் நெடுங்கணக்கில் உயிர் மெய் இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம் ஆகிய வரிசைகளில் சீரமைப்புத் தேவை எனப் பெரியார் அவர்கள் பரிந்துரைத்ததைப் பல அறிஞர்கள் ஏற்றுள்ளனர். சீரமைப்பின் இன்றியமையாமையையும் பல அறிஞர் பெருமக்கள் எடுத்துரைத்துள்ளனர். கலைமகள் இதழின் ஆசிரியராக இருந்த மாபெரும் தமிழறிஞர் திரு. கி.வா.ஜ., அவர்கள் பாரம்பரியத்தைப் பெரிதும் போற்றுபவர். தேவையென்பது தெளிவாக இருந்தால் ஒழிய மாற்றத்தை எளிதில் ஏற்பவர் அல்லர். அவரும் ஜனவரி 1979 கலைமகள் இதழில், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்ற தலைப்பில் உயிர் மெய் இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம் ஆகிய வரிசைகட்குக் குறியீடுகளைப் பயன்படுத்தினால். நான்கு குறியீடுகள் போதும். 68 குறியீடுகள் குறையும் என எழுதியுள்ளார். சிலம்புச் செல்வர் மா.பொ.சி. அவர்கள் எழுத்துச் சீரமைப்பைத் தொடர்ந்து எதிர்த்து வந்தவரே ஆவர். இருப்பினும் அடிப்படையில் ‘எந்த மாற்றத்தையும் ஏற்கேன்’ என்ற குழுவில் இருந்தவர் அல்லர். இந்தப் பிரச்சினையைக் கவனத்தோடும், கவலையோடும் அணுகியவர். நீண்ட வாதங்கட்குப் பின் 19.03.1989 - இல் அவருடைய பத்திரிகையான செங்கோல் இதழில், நாம் முன்பு கூறிய நான்கு வரிசைகளில் குறியீடுகளைப் பயன்படுத்தலாம் என்று கூறிவிட்டு

              “இதற்கு மேல் எத்தகைய சீர்திருத்தமும் தமிழ் எழுத்துகளுக்குத் தேவையில்லை”
              என்று தமது கட்டுரையை முடித்திருக்கிறார்.

பேராசிரியர் தெ.பொ.மீ., பேரா. மு.வ., ஐராவதம் மகாதேவன் போன்ற தலை சிறந்த மொழியியல் துறை, மொழித் துறை, கல்வெட்டுத் துறைப் பேராசிரியர்களும், ஆய்வாளர்களும் முழுமனத்தோடு ஆதரித்திருக்கின்றனர். தமிழகப் புலவர் குழுவின் தலைவராக இருந்த டாக்டர் தி. முத்து கண்ணப்பர், புலவர் குழந்தை, பேரா. அப்பாதுரை போன்றவர்களின் களங்கமற்ற தமிழ்ப் பற்றில், புலமையில் யாருக்கும் ஐயமிராது. இவர்களெல்லாம் தமிழுக்கு இன்றும் நாளையும் பெருமை சேர்க்கும் எதையும் புறக்கணிப்பவர்கள் அல்லர். ஐயத்திற்குரிய எதையும் ஆதரிப்பவர்கள் அல்லர். இவர்கள் அனைவரும் தயக்கங்காட்டாத தமிழ் எழுத்துச் சீர்திருத்தவாதிகளே யாவர்.

இரண்டாவதாக இத்தகைய மாற்றங்களை நாம் தான் செய்கிறோம் என்பது இல்லை. இந்திய மொழிக் குடும்பத்தினரும் செய்திருக்கின்றனர். அந்நிய மொழிக் குடும்பத்தினரும் செய்திருக்கின்றனர். பழமையான மொழிகள் அனைத்தினும் பழமையானது சீன மொழி. சீனாவில் பொதுவுடைமை அரசு செய்த முக்கியமான செயல்களில் ஒன்று, ஆட்சி ஏற்ற சில ஆண்டுகட்குள்-1954-இல்-ஒரு மொழிச் சீர்திருத்தக் குழுவை அமைத்து, பத்து ஆயிரத்திற்கு மேற்பட்ட எழுத்துகளைக் கொண்ட அந்த மொழியில் அடிப்படையாகக் கற்றுக் கொள்ளத் தேவையான எழுத்துகளை 2236 எனக் குறைத்தது ஆகும். ஐரோப்பிய மொழிகளில் ஜெர்மன் மொழி எல்லாத் துறைகளிலும் சிறப்புடையது. தத்துவத்¢ துறையின் தாய் மொழி என்றே கூறலாம். அந்த மொழி காத்திக் [Gothic] வரிவடிவத்தில் தான் எழுதப்பட்டு வந்தது. 1930-களில் முழுமையாக ரோமன் வரிவடிவத்திற்குப் போய் விட்டார்கள். இந்தோனேசிய மொழிக் குடும்பத்தினரும் பழைய வரிவடிவத்தைக் கைவிட்டு விட்டு ரோமன் வரிவடிவத்தை ஏற்றுக் கொண்டனர். மலேசிய மொழியும் ரோமன் வரிவடிவத்திற்கு மாறிவிட்டது.

நாம் இந்தியாவுக்கு வருவோம். மலையாள மொழியில் குறியீடுகள் ஏராளம், கேரள அரசு திரு. குஞ்சன் பிள்ளை தலைமையில் மார்ச் 2, 1967-இல் ஒரு குழுவை அமைத்து, அதன் பரிந்துரையைப் பெற்று, அதை மீள் ஆய்வு செய்து. அதன் அடிப்படையில் பயன்படுத்தி வந்த குறியீடுகளில் 75 சதவிகிதத்தைக் குறைத்து, மலையாள மொழியின் வரிவடிவத்தை மிகப் பெரிய அளவில் எளிமையாக்கிவிட்டனர். அதனால் மலையாள மொழியின் வளர்ச்சி தழைத்ததே அன்றித் தாழவில்லை, தளரவில்லை. இந்தி மொழியின் உயிர் எழுத்துகளில் எகரம், ஒகரம் இவற்றிற்குத் குறில் இல்லை. இவற்றில் நெடில்கள் மட்டுமே உள்ளன. மேலும் ள, ழ ஆகிய ஒலிகள் இல்லை. ஆட்சி மொழியாகப் பயன்படுத்தப்படும் இந்தி மொழியின் வரிவடிவத்தில் இந்த நான்கு ஒலிகட்கும் புதிய குறியீடுகளை உருவாக்கிப் பயன்படுத்துகிறார்கள்.

வரிவடிவ ஒற்றுமையை, வலிமைக்கு ஒரு உத்தியாக நாம் இந்தி மொழியில் பார்க்கலாம். இந்தியின் பிரிவுகளான கடிபோலி, போஜ்புரி, மைதிலி ஆகியன தம்முள் பெரிதும் மாறுபடுபவை. சாகித்ய அகாதமியில் இந்தி மொழி தவிர்த்து அதன் ஒரு பிரிவான மைதிலிக்கும் தனியாக ஒரு விருதுண்டு. இந்த மொழிப் பிரிவுகளைப் பேசினால் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வது கடினம். ஆனால் அவை ஒரே வரிவடிவத்தைக் கொண்டிருப்பதால் இந்தி என்பது ஒரு மொழி போன்ற தோற்றம் பெற்றிருப்பதையும் அதனால் அது பெரும்பான்மையர் மொழி என்று விளங்குவதையும் காண்கிறோம்.

பொதுவாக வரிவடிவத்தில் சில மாற்றங்கள் என்பது பாரதூரமான புரட்சிகரமான சிந்தனை அன்று. தமிழ் வரிவடிவம் கி.மு. மூன்றாவது நூற்றாண்டு முதல் கி.பி. 19 வரையிலும் அதற்குப் பின்னரும் தொடர்ந்து மாறியே வந்திருக்கிறது. உயிர் எழுத்துகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் படம்-1-இல் காணலாம். இன்றைய தமிழ் எழுத்துகளோடு ஒப்பிடும் பொழுது பண்டைய தமிழ் வரிவடிவம் மகவும் எளிதானதாகவே இருந்திருக்கிறது.

�படம்-1. கால வளர்ச்சியில் தமிழ் உயிர் எழுத்துகளில் ஏற்பட்ட மாற்றம்

தமிழ் மறையான திருக்குறளை எழுதுவதற்கு வள்ளுவர் பயன்படுத்தியிருக்கக் கூடிய தமிழ் உயிர் எழுத்துகளின் வடிவம் படம்-2-இல் கொடுக்கப்பட்டுள்ளது.

படம்-2 வள்ளுவர் பயன்படுத்திய வரிவடிவம்: உயிர் எழுத்துகள்

இந்த மாபெரும் வரிவடிவ மாற்றத்தால் வள்ளுவமும் மறைந்துவிடவில்லை, தமிழுக்கும் தீங்கு ஏற்பட்டுவிடவில்லை. நாம் முன்பே கூறியது போல ஒலி நிரந்தரமானது; வரிவடிவம் மாறி வருவது.

உயிர் மெய் எழுத்துகட்கு வரும் பொழுது நமது முன்னோர்கள் செப்பேடுகளில் குறியீட்டைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். நான்கு சான்றுகள் படம்-3-இல் கொடுக்கப்பட்டுள்ளன. படம்-3 a என்ற பிரிவில் உயிர் எழுத்துக்கே மிக எளிதாக வலது பக்கத்தில் வட்டெழுத்தில் குறியீட்டைப் பயன்படுத்தியிருப்பதைப் பார்க்கலாம். உகர நெடிலுக்கு, உகரத்தின் மேல் உட்கார்ந்து கொண்டு இன்னொரு எழுத்து-ளகரம்-சவாரி செய்வதற்குப் பதிலாக உகரத்தின் வலது புறத்தில் ஒரு குறியீட்டைப் பயன்படுத்துவது எளிதானது, எழிலுடையதும் கூட என நமது முன்னோர்கள் பயன்படுத்தி இருப்பது நமக்குப் பாடம் புகட்டுவதாகும். மேலும் 3b, படத்தில் உயிர் மெய் து-கரத்திற்குக் குறியீட்டைப் பயன்படுத்தியிருப்பதையும், படம்-3c-இல் உயிர் மெய் பி-கரத்திற்குக் குறியீட்டைப் பயன்படுத்தியிருப்பதையும், உயிர்மெய் ஐ-காரத்திற்கு, பெரியார் நம் காலத்தில் பயன்படுத்திய சங்கிலிக் கொம்பை பள்ளன் கோவில் செப்பேட்டில் அன்றே பயன்படுத்தி இருப்பதையும் படம் 3-d-இல் காணலாம்.

 1.	நாம் கூறும் மாற்றம் நடைமுறையில் எட்டுச் செங்குத்து வரிசைகளில் 144 எழுத்துகட்கு நாம் இப்பொழுது பயன்படுத்தும் 
       முறையாகும். இதே முறையை மீதமுள்ள நான்கு செங்குத்து வரிசைகட்கும் பயன்படுத்தலாம் என்பதுதான்  நாம் முன்வைக்கும் சீர்திருத்தம்.  
       இதில் புரட்சியும் இல்லை.  புதுமையும் இல்லை.  நம்மையுமறியாது நாம் தலைமுறை தலைமுறையாகச் சுமந்து வரும் பாரத்தை மிகப் 
       பெரிய அளவில் குறைக்கிறோம்
 2.	நாம் கூறும் மாற்றம் உயிர் மெய் எழுத்துகள் வரிசையில் முழுமையாக ஒரு சீர்மையை உருவாக்குகிறது. சீர்மை எளிமைக்கு அடிப்படை.  
 3.	தமிழ் கற்க முயலும் அயலகத் தமிழ்க் குழுந்தைகள் ஒருபுறம், மற்றும் முக்கியமாகத் தமிழகத்தில் ஆண்டு தோறும் ஆரம்பத்தில் தமிழ் கற்கும் 
       15 இலட்சம் குழுந்தைகள் மறுபுறம் எனக் குழந்தைகள் தமிழ் கற்பதைப் பெரிதும் எளிதாக்குகிறது. கற்க வேண்டிய குறியீடுகளை மூன்றில் 
       ஒரு பங்காகக் குறைக்கிறது. இது மாபெரும் சமுதாய நன்மை என்பதில் எந்த விதமான கருத்து வேறுபாடும் இருப்பதற்கு இடமில்லை. இந்தச் 
       சிறிய மாற்றத்தினால் இன்றோ அல்லது நாம் கற்பனை செய்யத்தக்க அளவில் எதிர்காலத்திலோ தமிழ் மொழிக்கு எவ்விதமான தீங்கும் நேர 
       அணுஅளவும் வாய்ப்பில்லை.

விரைவே வெற்றியின் அடிப்படை என்பதைக் கொள்கையாகக் கொண்ட 21-ஆவது நூற்றாண்டில் இந்த மாற்றம் காலத்துக் கேற்றது என்பது மட்டுமின்றித் தவிர்க்க இயலாத, இன்று இல்லாவிட்டால் நாளை இடம் பெற வேண்டிய மாற்றமேயாகும்.


மலேசியா, இலங்கை, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் நான் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய இந்தக் கருத்தை மேடையில் 

விளக்கிய பொழுது, எதிர்ப்புத் தெரிவித்தவர்களைக் கண்டதில்லை. மகத்தான சமுதாய நன்மையைத் தன்னுள் கொண்ட, இவ்வளவு எளிய சீர்த்திருத்தத்தை நாம் ஏன் இன்னும் செய்யவில்லை என்ற கேள்வியைத்தான் எழுப்பினார்கள். அவர்கள் கேள்விக்கு நான் சொன்ன பதில்:

இது எளிய மாற்றம் என்பதோடு இன்றியமையாத மாற்றம்; மேலும் தவிர்க்க இயலாத மாற்றமும் கூட. ஆனால் நடைமுறைப் படுத்துவதற்கு ஒரு நல்ல தலைவனுக்காகக் காத்திருக்கிறது


என்பதுதான். தலைவர்கள் தாமாக உருவாவதில்லை. நாம் தான் உருவாக்கவேண்டும்.

                மாறாத பொருள் எதுவும் வளர்வதில்லை
                வையத்தின் விதிஇதற்கு மாற்றமில்லை
                                                  - இது டார்வினின் [Darwin] தத்துவம்