பாரதி

விக்கிமூலம் இலிருந்து

பாரதி[தொகு]

கவிமணியின் கவிமலர்கள்[தொகு]

பார்க்க 23. பாவின்
1. அமரகவி
1. ஊரறிய நாடறிய உண்மை யெல்லாம்
ஒருவரையும் அஞ்சாமல் எடுத்துரைத்தோன்
ஆரமுதம் அனையகவி பாடித் தந்தோன்
அமரகவி யென்றெவரும் புகழப் பெற்றோன்,
சீருயரும் தமிழ்மக்கள் செய்த வத்தால்
தென்னாடு சிறக்க வந்த சுப்ரமண்ய
பாரதியார் பெயர்போற்றி ஏத்து வோமே
பாமாலை புனைந்தவற்குச் சாத்து வோமே.


2. பாரதியும் பட்டிக்காட்டானும்


(பட்டிக்காட்டான் பட்டணம் போனான். பாரதி பாடலைப் பண்ணோடு கேட்டான்; அதில் அவன்மனம் ஈடுபட்டது. சில தினங்களில் ஊருக்குத் திரும்பினான். அங்கே தன் நண்பர்களுக்கு அப்பாடல்களின் அருமை பெருமைகளை உணர்ந்த மட்டில் விவரித்துக் கூறினான்.)


(வெண்பா)
1. உள்ளக் கருத்தை யெல்லாம் உள்ளபடி யானிந்த
வெள்ளைக் கவியில் விளம்பினேன் - தெள்ளுதமிழ்
வெண்பாப் புலியும் விகட கவியுமெனக்
கண்பார்த்துக் காத்தல் கடன்.
(வேறு)
2. பாட்டுக் கொருபுலவன் பாரதியடா! அவன்
பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா!
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா! - அந்தக்
கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா!
3. சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமேயடா! - கவி
துள்ளும் மறியைப்போலே துள்ளுமேயடா!
கல்லும் கனிந்துகனி யாகுமேயடா! - பசுங்
கன்றும்பால் உண்டிடாது கேட்குமேயடா!
4. குயிலும் கிளியும் பாட்டில் கூவுமேயடா! - மயில்
குதித்துக் குதித்துநடம் ஆடுமேயடா!
வெயிலும் மழையுமதில் தோன்றுமேயடா! - மலர்
விரித்து விரித்து மணம் வீசுமேயடா!
5. அலைமேலே அலைவந்து மோதுமேயடா! - அலை
அழகான முத்தையள்ளிக் கொட்டுமேயடா!
மலைமேலே மலைவளர்ந் தோங்குமேயடா! - அதை
வனங்கள் அடர்ந்தடர்ந்து சூழுமேயடா!
6. விண்ணிலொளிரு மீன்கள் மின்னுமேயடா! விண்ணில்
விளங்கும் மதிநிலவு வீசுமேயடா!
கண்ணுக் கினியசோலை காணுமேயடா! அதில்
களித்திள மான்கள் விளையாடுமேயடா!
7. தேனும்தினையும் பாவில் உண்ணலாமடா! - மிகத்
தித்திக்கும் முக்கனியும் உண்ணலாமடா!
கானக்குழலிசையும் கேட்கலாமடா! - ஊடே
களிவண்டு பாடுவதும் கேட்கலாமடா!
8. நாட்டு மொழியுமவன் பாட்டினிசையில் - மிக்க
நல்ல கற்கண்டினிமை சொட்டுமேயடா!
ஏட்டிலிம் மந்திரந்தான் கண்டவருண்டோ? - ஈதல்
ஈசன் திருவருளென் றெண்ணுவாயடா!
9. உள்ளந் தெளியுமொரு பாட்டிலேயடா! - மிக்க
ஊக்கம் பிறக்குமொரு பாட்டிலேயடா!
கள்ளின் வெறிகொளுமோர் பாட்டிலேயடா! - ஊற்றாய்க்
கண்ணீர் சொரிந்திடுமோர் பாட்டிலேயடா!

பாரதியும் பட்டிக்காட்டானும்[தொகு]

(வேறு)
10.‘கரும்புத் தோட்டத்திலே’ -எனுங்கவி
காதைச் சுடுகுதடா!
இரும்பு நெஞ்சமுமே- நீராய்
இளகி யோடுதடா!

11.'செந்தமிழ் நாட்டின்’ - முதன்மொழி
செவியிற் சேருமுன்னே,
அந்தமில் லாமல்- உள்ளத்தில்
அமுதம் ஊறுதடா!

12. ‘பாப்பாப் பாட்டி’லே - நெஞ்சைப்
பறிகொடுத் தேனடா!
சாப்பா டேதுக்கடா!-சீனி
சர்க்கரை ஏதுக்கடா?

13. அன்னை ‘பாஞ்சாலி சபதம்’
அறைதல் கேட்டேனடா!
முன்னைக் கதையெல்லாம்- கண்ணின்
முன் நடந்ததடா!

14. ‘வந்தேமாதர’த்தைப் - பாடவே
வாய்தி றந்தவுடன்
சந்தேகமில்லை - ஒருபுதுச்
சக்தி தோன்றுதடா!

15. ‘எங்கள் நாடு’தான் -பூபாள
இசையி லேறிடுமேல்
கங்கை யாறுபோல் - உள்ளத்தில்
களிப்பொ ழுகுதடா!

16. ‘சின்னஞ் சிறுகிளி’ - கனவில்
தினமும் காணுதடா!
கன்னங் குழியவே - முத்தமும்
கனிந்த ளிக்குதடா!

17. ‘கண்ணன் காதலன்’ - எனக்கொரு
கனிய முதமடா!
விண்ண முதமுமே - அதனை
வெல்ல மாட்டாதடா!

18. ‘குயிலின் பாட்டி’லே - காதல்
கொப்புளிக்குதடா!
செயல்மறந் தேனடா - லாகிரி
சிரசிற் கொண்டதடா!

19. ‘சுதந்திரப் பாட்டில்’ - உள்ளம்
துடிதுடிக் குதடா!
பதமெ ழும்புதடா! கையும்
படபடக் குதடா!

20. ‘தொண்டு செய்யுமடிமை’ - என்னும்
சுடுசரம் ஓடி,
மண்டையைத் தாக்குதடா! நெஞ்சம்
மடியப் பாயுதடா!

21. பெண்டு பிள்ளைகளின் - பெருமை
பெரிதறிந் தேனடா!
சண்டைகள் செய்ததெல்லாம் - எண்ணித்
தலைகவிழ்ந் தேனடா!

22. ஏழைதுய ரெல்லாம் - அவனும்
எடுத்தடுக் கையிலே,
மூளை கலங்குதடா! - விம்மி
மூச்சும் முட்டுதடா!

23. பாவின் நயமெல்லாம்

- யானும்
பகர வல்லேனோ?
ஆவின் பாற்சுவையை - நாழி
அளந்து காட்டிடுமோ?

3. பாரதி மண்டபம்

(வெண்பா)
1. தேவருமே இங்குவந்து செந்தமிழைக் கற்றினிய
பாவலராய் வாழமனம் பற்றுவரே - பூவுலகில்
வானுயரும் பாரதியார் மண்டபத்தை எட்டப்பன்
மாநகரில் கண்டு மகிழ்ந்து.
(வேறு)

4. திறப்பு விழா

2. பாரதத்தாய் செய்ததவப் பயனாய் வந்த
பாவலன் சுப்பிரமணிய பாரதிக்குச்
சீருயரும் எட்டய்ய புரத்திற் கண்ட
திருக்கயிலை யனையமணி மண்டபத்தைப்
பேருவகை தருசர்வ ஜித்தில் கன்னி
பிறந்தஇரு பானேழில் திறந்து வைத்தான்,
தாரணியில் வங்கவள நாட்டை யாளும்
சக்ரவர்த்தி ராஜகோ பாலமாலே.


பார்க்க:[தொகு]
கவிமணியின் கவிமலர்கள்
பக்தி மஞ்சரி
அழகம்மை ஆசிரியவிருத்தம்
கவிதை
பாரதி
மனோன்மணீயம் சுந்தரனார்
ஆறுமுக நாவலர்
[[ ]]
[[ ]]
மருமக்கள்வழி மான்மியம் - கவிமணி
"https://ta.wikisource.org/w/index.php?title=பாரதி&oldid=1399058" இலிருந்து மீள்விக்கப்பட்டது