முத்துப்பட்டன் கதை, கேரளம்

விக்கிமூலம் இலிருந்து

கேரளத்தில் நெடுமங்காடு அருகே உள்ள ஆரியநாடு செழிப்புடைய நாடு. அந்த நாட்டில் பிராமணச் சாதியைச் சார்ந்த ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களில் கடைசியாகப் பிறந்தவன் முத்துப்பட்டன். அவன் நல்ல உடல் வலிமை உடையவன். போர்க்கலைகளைப் படித்தவன். வாள் யுத்தத்தில் வல்லவன்.


ஒருமுறை முத்துப்பட்டனுக்கும் அவனது சகோதரர்களுக்கம் இடையே மாறுபாடு வந்தது. அதனால் முத்துப்பட்டன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டே புறப்பட்டுவிட்டான். காடு மலைகள் எல்லாம் அலைந்தான். கொட்டாரக்கரை என்ற ஊருக்கு வந்தான். கொட்டாரக்கரையில் அப்போது அரசனாயிருந்தவன் பெயர் ராமராசன். அந்த அரசன் முத்துப்பட்டனைத் தன் பாதுகாப்பு படைவீரனாக வைத்துக்கொண்டான். பல சிறப்புகள் அவனுக்குச் செய்தான்.


முத்துப்பட்டன் அண்ணன்மார்கள் தம்பியைத் தேடி ஒவ்வொரு ஊராக வந்தார்கள். கொட்டாரக்கரைக்கும் வந்தனர். அங்கு பவிசோடு இருந்த தம்பியைக் கண்டனர். "தம்பி! எங்கள் தவறுகளை மன்னித்துவிடு. சேஷையர் மகளை உனக்குப் பேசி முடித்திருக்கிறோம். நீ சொல்லாமல் கொள்ளாமல் வந்துவிட்டாயே, எங்களுடன் வீட்டுக்கு வா" என்றனர். முத்துப்பட்டனோ "நான் இப்போது ராமராசனின் சேவகன். அவரிடம் உத்தரவு கேளுங்கள். வருகிறேன்" என்றான். அண்ணன்மார்கள் ராமராசரிடம் தம்பியை அழைத்துச் செல்ல அனுமதி கேட்டனர். ராமராசனும் மகிழ்ந்து அனுமதியும் கொடுத்தார். முத்துப்பட்டனுக்கும் பரிசுகளும் கொடுத்தனர்.


முத்துப்பட்டன் அண்ணன்மார்களுடன் ஆரியங்காவு காட்டு வழியே தன் ஊருக்குச் சென்றான். ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் கோவில் வந்து பட்டன்மார்கள் பூஜை செய்து கும்பிட்டார்கள். வழியில் பாபநாசம் அரசடித்துறை என்ற இடத்தில் தங்கினார்கள். முத்துப்பட்டன் "நான் இங்கு கொஞ்ச நேரம் இருந்து சிவ பூஜை செய்து வருகிறேன், நீங்கள் வேண்டுமானால் செல்லுங்கள்" என்றான். அண்ணன்மார்கள் அவனது பொருளுக்கு ஆசைப்பட்டு அவனை அங்கேயே விட்டுவிட்டு சுமையுடன் நடந்தார்கள்.

முத்துப்பட்டன் அந்தப் பாறையில் கண் அயர்ந்த நேரம் மெல்லிய குரலில் யாரோ பாடுவதைக் கேட்டான். திரும்பிப் பார்த்தான். இரண்டு பெண்கள், இரண்டு நாயுடன் வருவதைக் கண்டான். அழகான பெண்களின் அருகே சென்றான்.


அப்பெண்களிடம் "இனிய குரல் வளமும் அழகிய அழகும் பொருந்திய பெண்களே! உங்கள் அழகு என்னை மயக்குகிறது. என் தாபத்தைத் தீருங்கள்" என்றான்.


அந்தப் பெண்களோ "என்ன அநியாயம் இது. நாங்கள் சக்கிலியப் பெண்கள். நீரோ பிராமணச் சாதியினர். இதை நீர் கேட்கவே கூடாது" என்றனர்.


முத்துப்பட்டன் அவர்களிடம் "நீங்கள் இல்லாமல் என்னால் வாழமுடியாது. உங்களுக்காக நான் எல்லா உறவுகளையும் விட்டிவிட்டு இங்கேயே தங்கத் தயாராக இருக்கிறேன் . என்னை அணைத்துக்கொள்ளுங்கள்" என்றான். அவர்கள் அஞ்சி ஓடினர். முத்துப்பட்டன் அவர்களைத் துரத்தினான். அவர்கள் காட்டுமரங்களுக்குள் நுழைந்து ஓடினர். பட்டன் விடவில்லை. அப்பெண்களோ குறுக்கு வழியே போய் தந்தையை அடைந்தனர். காட்டில் ஓடமுடியாத பட்டன் நின்றுவிட்டான்


தந்தையிடம் "தந்தையே எங்களை ஒரு பட்டன் துரத்தி வருகிறான்" என்றனர். தந்தையான பகடை "இப்போதே அப்பாதகனைக் கொன்று வருகிறேன்" என்று கூறி வல்லயத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.


பகடை காட்டுவழியே வரும்போது பட்டன் காட்டுச் செடிகளுக்கிடையே கிடந்தான். பகடை அழகொளிரக் கிடக்கும் பட்டனைப் பார்த்து ஐயோ இத்தனை அழகான இளைஞன் யாரோ? இவன் தந்தை யாரோ என எண்ணினான். சிறிய கல்லை அவன் மேல் விட்டெறிந்தான். பட்டன் விழித்தான். சக்கிலியனைப் பார்த்தான். நீர் யார் ? எனக் கேட்டான்.


சக்கிலியன் என் பேர் வால பகடை. என் புதல்விகள் பொம்மக்காவும் திம்மக்காவும் இந்தக் காட்டுவழியே வரும்போது ஒரு பட்டன் அவர்களை மோசம் செய்ய வந்திருக்கிறான். அவனைக் கண்டதுண்டமாக வெட்டி காட்டு நரிகளுக்குப் போட வந்தேன் என்றான்.


அதைக் கேட்ட பட்டன் புலம்ப ஆரம்பித்தான். ஐயோ மாமனாரே, உன் மக்களுக்காக ஆசைப்பட்டது நான்தான். உன் பெண்களுக்காக உடன் பிறந்தவர்களை வெறுத்து நிற்கிறேன். நாலுபேர் அறிய உன் பெண்களை மணம் செய்துகொள்ளுகிறேன் என்றான்.


பகடையோ ஐயோ நான் சக்கிலியன். நாய் சாதி. என்னை நீங்கள் தீண்டமுடியுமா? நாங்கள் செத்த மாட்டைத் தின்பாம். சேரியில் வாழ்வோம். தோலை அழுகு வைப்போம். மாடு அறுப்போம். சாராயம் குடிப்போம். இது வேண்டாம் அந்தணரே என்றான்.


பட்டனோ மாமனே சொல்வதைக் கேள், புண்ணியம் உண்டு. உன் மக்களை எனக்கு மணம் செய்து வை. உன் ஜாதியில் நான் இணைந்துவிடுகிறேன் என்றான்.


பகடை எங்களைப்போல் நீயும் தோல் செருப்பு அணிந்து பூ நூல் அறுத்து குடுமி இல்லாமல் இருந்தால் என் மக்களை உனக்குத் தருகிறேன். நீ உன் தமயன்மார்களிடம் இதைச் சொல்லி வரவேண்டும் என்றான்.


முத்துப்பட்டன் சக்கிலியன் பேச்சுக்குச் சம்மதித்தான். தன் அண்ணன்மார்களைத் தேடிச் சென்றான். அவர்கள் விக்கிரமசிங்கபுரம் அக்கிரகாரத்தில் இருப்பதை அறிந்து அங்கு சென்றான். தான் ஒரு சக்கிலியனின் புதல்விகளை மணம் செய்யப் போவதைச் சொல்லி அனுமதி கேட்டான். அண்ணன்மார்கள் உனக்கு என்ன பைத்தியம் பிடித்திருக்கிறதா? என்று கேட்டு பொங்கி எழுந்தனர். பலவாறாக நயந்தும் பயந்தும் சொல்லிப்பேர்த்தனர். பட்டன் கேட்கவில்லை. பட்டனைப் பெரிய அறையில் அடைத்து வைத்தனர்.


முத்துப்பட்டனோ நில அறைக்கல்லைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியே வந்தான். விக்கிரமபுரச் சந்தையில் தோல் செருப்பு தைத்துக்கொண்டான். பூநூலை அறுத்தான். குடுமியைக் களைந்தான். பகடையின் வீட்டிற்கு வந்தான்.


வால பகடை வேறுவழியில்லாமல் திருமணத்திற்குரிய ஏற்பாடுகளைச் செய்தான். தன் ஜாதிச் சனங்களை வரவழைத்தான். பெரிய பந்தலிட்டான். வாழைக்குலை நாட்டினான். பெரிய மணவறை செய்தான். பட்டனுக்குத் தன் மகளைக் கொடுத்தான். திருமணம் இனிதே நடந்தது. பொம்மக்காளும் திம்மக்காளும் சாதி முறைப்படி பட்டனுக்கு சாப்பாடு கொண்டு வைத்தனர். தன் பங்கு மாடுகன்றுகளுடன் முத்துப்பட்டன் சக்கிலிய குடியில் வாழவந்தான்.


திருமணம் முடிந்ததும் சக்கிலியப் பெண்கள் கும்மி அடித்தனர். அவர்களுடன் சேர்ந்து முத்துப்பட்டனும் கும்மியை ரசித்தான். கும்மி முடிந்ததும் பட்டன் பொம்மக்கா மடியில் தலையையும் திம்மக்கா மடியில் காலையும் வைத்து உறஙகினான். உறஙகும்போது தன் கையில் கட்டிய காப்பு நூலைக் கரையான் அரிக்கவும், உடம்பு கெட்டுப்படவும், கோழிக்கூட்டிலிருந்து வரவும் கனவு கண்டான்.


அந்த வேளையில் ஒரு தொப்பி ஆள் வந்தான். அண்ணே முத்துப்பட்டா உங்கள் கிடை மாடுகளை வன்னியர் கொண்டு போகிறார்கள் என்றான். பட்டன் சினத்தோடு எழுந்தான். ' என் மாடுகளைத் திருடிய 'வன்னியரையும் உப்பளங்கோட்டை மறவர்களையும் இப்பொழுதே அழிக்கிறேன் எனக் கூறிப் புறப்பட்டான்.


முத்துப்பட்டனை அவன் மனைவிகள் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று சொல்லி தடுத்தனர். பட்டனோ அவர்களை சொன்னதை கேட்க வில்லை. மனைவிகள் வளர்த்த ஆச்சி நாய், பூச்சி நாயை துணைக்கு அழைத்துக்கொண்டு 1000 வன்னியர்களை எதிர்க்கச் சென்றான். அவர்களுடன் போரிட்டு எல்லோரையும் வெட்டி வீழ்த்தி மாடுகளை மீட்டான். பின்னர் உடம்பில் பட்ட குருதியை ஒரு சுனையில் கழுவச் சென்றான்.


அப்போது ஏற்கனவே ஏற்பாடுசெய்திருந்தபடி சப்பாணி ஒருவன் பின்னாலிருந்து பட்டனைக் குத்திக் கொன்றுவிட்டான்.அவரை தாக்கியவனையும் வீழ்த்தினார். பட்டன் இறந்ததைப் பார்த்து ஆச்சி நாய், பூச்சி நாய் சக்கிலியனின் வீட்டிற்கு ஓடி பொம்மக்கா திம்மக்காவை பிடித்து இழுத்தது. பொம்மக்காவும் திம்மக்காவும் பட்டனுக்கு ஏதோ ஆகிவிட்டது என்பதை உணர்ந்து சாதமும் கறியும் எடுத்துக்கொண்டு நாயின் பின்னால் சென்றனர்.


பட்டன் இறந்துகிடந்த இடத்திற்கு அவர்கள் வந்தனர். இறந்த கணவனைப் பார்த்ததும் அலறிப் புலம்பி சட்டியை எறிந்துவிட்டு அவன் மேலே விழுந்து அழுதனர். பட்டனை எடுத்தத் தோள் மேல் போட்டுக்கொண்டு சிங்கம்பட்டி அரண்மனைக்குச் சென்றனர். அரசனிடம் தங்கள் வரலாற்றைக் கூறி தாங்கள் பட்டனுடன் தீயிலே இறக்க அனுமதி கேட்டனர். பழிபாவம் ஏற்படும் என்று மன்னன் மறுத்துப் பார்த்தான். பெண்கள் ஒரேயடியாய் கெஞ்சினர்.


அவர்கள் கற்பின் உறுதியைக் கண்ட மன்னன் பெரும் தீ வளர்க்க உதவினான். அத்தீயில் இருவரும் பாய்ந்து உயிரை விட்டனர், கூடவே ஆச்சி நாயும் பூச்சி நாயும் தீயில் விழுந்து உயிர் விட்டது. அவர்கள் கதையைக் கேட்ட ஊரார் அவர்கள் தெய்வங்களாகிவிட்டதை அறிந்தனர். சிங்கம்பட்டி மன்னன் அவர்களுக்குக் கோயில் எடுப்பித்து பலியும் பூசனையும் செய்வித்தான். அவர்கள் தெய்வங்களாகி ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் கோவிலில் (பாபநாசம் - திருநெல்வேலி) அருள் புரிந்து வருகிறார்கள்.