தியாக பூமி/பனி/சாவித்திரியின் பயணம்
சாவித்திரியின் பயணம்
மேலே சொன்ன தங்கம்மாளின் கடிதத்தைப் படித்தவுடனே தான், சாஸ்திரியார் அவ்வளவு சந்தோஷத்துடன் வந்து, "சாவித்திரி! உன் கலி தீர்ந்துவிட்டது, அம்மா!" என்றார்.
சாவித்திரிக்கு மயிர்க்கூச்சல் எடுத்தது. திடுக்கிட்டு எழுந்திருந்து, "ஏதாவது கடுதாசி வந்திருக்கா, அப்பா!" என்று கேட்டுக் கொண்டு வந்தாள்.
"ஆமாம்மா! சம்பந்தியம்மாள் நரசிங்கபுரத்துக்குப் பொண்ணைப் பார்க்கிறதுக்கு வர்றாளாம். திரும்பிப் போறபோது கல்கத்தாவுக்கு உன்னைக் கூட்டிண்டு போறாளாம்" என்றார்.
சாவித்திரி நம்ப முடியாத சந்தோஷத்துடன், "நிஜமாகவா, அப்பா!" என்று கூவினாள்.
இந்தச் சம்பாஷணையை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டுச் சமையலறைக்குப் போனாள் மங்களம்.
"அடி அம்மா! இந்தப் பொண்ணுக்கு விமோசனம் பிறந்துட்டாப்பலேயிருக்குடி!" என்றாள்.
"விமோசனம் பிறந்திருக்கா? அது என்ன?" என்றாள் சொர்ணம்மாள்.
"சம்பந்தியம்மாள் நரசிங்கபுரத்துக்கு வர்றாளாம். இவளைக் கூட்டிண்டு வந்து விடச் சொல்லி எழுதியிருக்காளாம்."
"அந்தப் பெரிய மனுஷிக்கு இங்கே வந்து அழைச்சுண்டு போக முடியலையாக்கும்! உன்னையும் என்னையும் பார்க்க வேண்டியிருக்கலையாக்கும்."
"அது போனால் போகட்டுண்டு, அம்மா! இந்தப் பொண் எப்படியாவது புக்காத்துக்குப் போய்ச் சௌக்கியமாயிருந்தால் சரி! அரசமரத்துப் பிள்ளையாரே! சாவித்திரி புக்காத்துக்குப் போனா, உனக்கு 108 கொழக்கட்டை பண்ணி நைவேத்யம் பண்றேன்" என்றாள் மங்களம்.
"அடி அசடே! புக்காத்துக்குப் போய்த் திரும்பி வராதிருந்தா நைவேத்யம் பண்றேன்னு வேண்டிக்கோ. இது வாயையும் கையையும் வச்சிண்டு, அங்கே போய் வாழணுமே! உன் சம்பந்தி இலேசுப்பட்டவள்னு நெனச்சுக்காதே. என்னத்துக்குத் தான் வராமே இவரைக் கூட்டிண்டு வந்து விடச் சொல்லியிருக்கா, தெரியுமா? அப்பத்தானே இந்தப் பிராமணனை இன்னும் நன்னா மொட்டையடிக்கலாம்!..."
இந்தச் சமயத்தில், செவிட்டு வைத்தி, "அக்கா! அம்மா என்ன சொல்றா?" என்று கேட்டான்.
மங்களம் ஜாடை காட்டிக் கொண்டே, "சாவித்திரி புக்காத்துக்குப் போகப் போறாளாண்டா!" என்றாள்.
"சாவித்திரிதானே? ஆமாம்; கதவைச் சாத்திண்டு ஆம்படையானுக்குக் கடுதாசி எழுதறா, எழுதறா, அப்படியே எழுதறா!"
சொர்ணம்மாள், தாலி கட்டுவதுபோல் ஜாடை காட்டிக் கொண்டு, "இல்லேடா! அவள் ஆம்படையானாத்துக்குப் போகப் போறா!" என்றாள்.
"அதான் நானும் சொல்றேன். அப்பவே எனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தா, ராஜாத்தியாட்டமா வச்சிண்டிருப்பனே!"
"சீச்சீ! வாயை மூடிக்கோ!" என்றாள் மங்களம். கல்கத்தா கடிதத்தை அப்பாவிடமிருந்து வாங்கிப் படித்ததும் சாவித்திரிக்குக் கொஞ்சம் உற்சாகம் குறைந்தது. இத்தனை நாள் கழித்து வந்த இந்தக் கடிதமாவது மாப்பிள்ளை எழுதினதாயிருக்கக் கூடாதா என்று நினைத்தாள். பிறகு, 'படித்த நாகரிக மனுஷராயிருந்தாலும் தாயார் தகப்பனாருக்கு அடங்கிய பிள்ளை. அவர்களை மீறி ஒன்றும் செய்யமாட்டார் போல் இருக்கிறது. நாமும் புக்காத்துக்குப் போனால், மாமனார் மாமியாருக்கு அடங்கி நடந்து அவரைச் சந்தோஷப்படுத்த வேண்டும்' என்று நினைத்துக் கொண்டாள். "அழைத்துப் போகிற உத்தேசம் இருக்கிறது" என்று மட்டும் தங்கம்மாள் எழுதியிருந்தபடியால், அதற்கு ஒன்றும் தடங்கல் இல்லாமல் இருக்கவேண்டுமேயென்று கவலைப்பட்டாள். எப்படியும் தான் இன்று எழுதிய கடிதத்தைத் தபாலில் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. அதைப் பத்திரமாய் வைத்திருந்து கல்கத்தாவுக்குப் போன பிறகு மாப்பிள்ளையிடம் காட்ட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டாள்.
சம்பு சாஸ்திரி குறிப்பிட்ட தேதியில் நரசிங்கபுரத்துக்குப் போனார். அவரிடமிருந்து இரண்டு நாளைக்கெல்லாம் சாவித்திரிக்கு ஒரு கடிதம் வந்தது. "சம்பந்தியம்மாள் உன்னைக் கூட்டிக்கொண்டு போவதாக ஏற்பாடாகிவிட்டது. அடுத்த புதன்கிழமை நாள் பார்த்திருக்கிறது. எனக்கு நாகப்பட்டினத்தில் கொஞ்சம் வேலை இருக்கிறது. பார்த்துக்கொண்டு நாலு நாளில் வருகிறேன். அதற்குள், உன்னை அனுப்புவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து வைக்கும்படி சித்தியிடம் சொல்லவும்" என்று எழுதியிருந்தது.
சாவித்திரிக்கு உண்டான குதூகலத்துக்கு அளவேயில்லை. "பகவானே! கடைசியில் உன்மனம் இரங்கிற்றா? என்னுடைய பிரார்த்தனையெல்லாம் பலித்ததா? உண்மையிலேயே என் கலி தீரப்போகிறதா? இந்தச் சனியன்களை விட்டுப் போகப் போகிறேனா! கல்கத்தாவுக்குப் போய் என் பிராண நாதருடன் குடித்தனம் நடத்தப் போகிறேனா? கல்கத்தா பட்டணம் எப்படியிருக்கும்? கும்பகோணத்தையும் நாகப்பட்டினத்தையும் விடப் பெரிசாயிருக்குமோ? அங்கேயெல்லாம் தெரு வீதியில் தந்திக் கம்பியிலே வண்டி ஓடுமாமே? அது எப்படியிருக்குமோ?"... ஒரு பக்கம் இம்மாதிரி எண்ணங்கள்.
'அப்பாவைச் சித்தி, பாட்டி, செவிட்டு வைத்தி இவர்கள் கையில் விட்டுவிட்டுப் போகிறோமே. இவர்கள் அவருடைய பிராணனை வாங்கிவிடுவார்களே' என்ற வேதனை மற்றொரு பக்கம். "இந்தச் சமயத்தில்தானா அப்பாவுக்கு நாகப்பட்டினத்திலே வேலை இருக்க வேண்டும்? கிளம்புவதற்கு முன்னால் நாலு நாளைக்கு அவர் ஆத்தில் இருக்கக் கூடாது? இந்த நாலு நாளும் அவருக்குச் சிசுரூஷை செய்தாலாவது மனத்துக்குக் கொஞ்சம் ஆறுதலாயிருக்குமே?" என்ற ஏக்கம் இன்னொரு பக்கம்.
சாவித்திரிக்கு அப்போதிருந்த மனோநிலையில் மங்களத்துடன் கூட உறவு கொண்டாடத் தொடங்கினாள். எவ்வளவு சிரமப்பட்டும், சொர்ணம்மாளிடம் மனத்தைத் திறந்து பேச அவளால் முடியவில்லை. ஆனால், மங்களம் தனியாயிருந்த போதெல்லாம் அவளிடம் வந்து, "சித்தி! புக்காத்திலே எப்படியிருக்க வேண்டும்? மாமனார் மாமியாருக்கு எப்படி சிசுரூஷை செய்யவேண்டும், சொல்லு! அவாள் வீட்டிலே ஒரு வேளை பரிசாரகன் இருந்தா, நான் என்ன காரியம் செய்யறது? என்னால் வெறுமனே உட்கார்ந்திருக்க முடியாதே?" என்றெல்லாம் கேட்பாள். அப்புறம், "சித்தி! என்ன இருந்தாலும் உன்னையும் அப்பாவையும் விட்டுட்டுப் போறது எனக்குக் கஷ்டமாய்த்தான் இருக்கு. நான் கல்கத்தாவிலிருந்தாலும் உங்களைத்தான் அடிக்கடி நினைச்சுண்டிருப்பேன், நீ என்னை நினைச்சுக்குவயோ, மாட்டயோ?" என்பாள்.
மங்களத்துக்கும் அந்தச் சமயத்தில் சாவித்திரியிடம் புது அன்பு தோன்றியிருந்தது. தினம் தலைவாரிப் பூ வைத்து, அலங்காரம் எல்லாம் செய்துவிட்டதோடு, மாமியாராத்தில் அப்படியிருக்கவேண்டும், இப்படியிருக்கவேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தாள். "ஏதோ உலகத்திலே எல்லாரையும் போலே சாந்திக் கல்யாணம் என்று பண்ணிப் புக்காத்திலே கொண்டு விட்டுட்டு வர்றத்துக்கு எங்களுக்குக் கொடுத்து வைக்கலை. எப்படியாவது நீ சந்தோஷமாயிருந்தால் சரி" என்று அடிக்கடி கூறினாள். 'நல்ல வேளை! சாந்திக் கல்யாணச் செலவெல்லாம் இல்லாமற்போச்சே' என்ற திருப்தி அவள் மனத்திற்குள் இருந்தது. இதை நினைத்து பெண்ணைப் புக்ககத்துக்கு முதன் முதலில் அனுப்பும் போது செய்ய வேண்டிய சீர்களை அவள் தாராளமாகவே செய்து கொண்டிருந்தாள். பருப்புத் தேங்காய், பக்ஷணம் எல்லாம் பண்ணி வைத்தாள். நாலு நாள் கழித்துச் சம்பு சாஸ்திரி வந்தார். மறுநாள் தான் புதன்கிழமை. ஆகையால், பிரயாண ஏற்பாடுகள் எல்லாம் துரிதமாக நடந்தன.
புறப்படும் நாள் நெருங்கிவிடவே, சாவித்திரிக்குத் தகப்பனாரைவிட்டுப் பிரிய வேண்டுமே என்ற எண்ணம் அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது. அன்றிரவு அவள் சாஸ்திரியுடன் தனியாயிருந்தபோது, "அப்பா! நான் போய்ட்டா, நீங்க தனியாயிருக்கணுமே? எப்படியப்பா இருப்பேள்?" என்றாள்.
"அதற்கு என்ன குழந்தை செய்யலாம்? உலகத்தில் பெண்ணைப் பெற்றவர்கள் என்றைக்காவது ஒருநாள் விட்டுப் பிரிய வேண்டியதுதான். நீ எப்படியாவது புக்காத்துக்குப் போய்ச் சௌக்கியமாயிருக்க வேண்டும். அதுதானம்மா முக்கியம்" என்றார் சாஸ்திரி.
புதன்கிழமை காலையில், நல்ல வேளையில் வாசலில் இரட்டை மாட்டு வண்டி வந்து நின்றது. நல்லான் தான் வண்டி கொண்டு வந்திருந்தான். அவன் முகத்திலும் சந்தோஷம் தாண்டவமாடிற்று.
உள்ளே சாஸ்திரி, "ஊம், ஊம், சீக்கிரம்!" என்று அவசரப்படுத்திக் கொண்டிருந்தார். சாமான்கள் ஒவ்வொன்றாய் வண்டியில் கொண்டு வந்து ஏற்றப்பட்டன. சாவித்திரி தன்னால் தவக்கம் ஆகக்கூடாதென்ற எண்ணத்தினால் கையில் கூஜாவை எடுத்துக் கொண்டு, அரைமணி நேரத்திற்கு முன்னாலிருந்து தயாராய் நின்று கொண்டிருந்தாள்.
கடைசியில், சாமான்கள் எல்லாம் வண்டியில் ஏற்றியான பிறகு, புறப்பட வேண்டிய வேளை வந்ததும் சாவித்திரி, சொர்ணம்மாளுக்கும் மங்களத்துக்கும் நமஸ்காரம் செய்தாள். செவிட்டு வைத்திக்குக்கூட, "மாமா! உனக்கும் நமஸ்காரம் பண்றேன்" என்று சொல்லிவிட்டு ஒரு பாதி நமஸ்காரம் பண்ணி எழுந்தாள். வைத்திக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அவன் அசட்டுச் சிரிப்புடன், "எனக்கு என்னத்துக்கு?" என்றான்.
மங்களம், சாவித்திரியின் நெற்றியில் விபூதி இட்டாள். பிறகு எல்லாரும் வாசலுக்கு வந்தார்கள். சாவித்திரி தெரு வீதியில் இறங்கியதும், மறுபடியும் திரும்பிப் பார்த்து "சித்தி! போய்ட்டு வர்றேன்!" என்றாள். மங்களம் "மகராஜியாய்ப் போயிட்டுவா, அம்மா!" என்றாள்.
ரேழியில் கதவோரமாய் நின்ற அவள் தாயார், "போய்ட்டு வாவாம்! நிஜந்தான்னு மறுபடியும் வந்து வைக்கப்போறது!" என்று முணுமுணுத்தாள்.
சாவித்திரியும் சம்பு சாஸ்திரியும் வண்டியில் எறிக் கொண்டார்கள். வண்டியும் 'ஜில் ஜில்' என்ற மாட்டின் சதங்கைச் சத்தத்துடன் கிளம்பிற்று.
சாவித்திரியின் மனோநிலை அப்போது எப்படி இருந்தது? இத்தனை நாளும் வசித்த ஊரை விட்டுப் போகிறோமே என்று அவள் மனத்தில் வருத்தம் உண்டாயிற்றா? நெடுங்கரையை மறுபடி எப்போது பார்ப்போம் என்று ஏங்கினாளா? அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையென்பதைத் தெரிவிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
'அம்மா! கடைசியிலே, இந்தச் சனியன் பிடித்த நெடுங்கரையைவிட்டுக் கிளம்பியாச்சு! இந்த ஊர் முகத்திலேயே இனிமேல் விழிக்க வேண்டாம்' என்று தான் அவள் எண்ணினாள்.
சாவித்திரி! சாவித்திரி! இந்தச் 'சனியன் பிடித்த நெடுங்கரைக்குத் திரும்பிப் போகமாட்டோ மா' என்று ஒரு நாளைக்கு நீ தாபங் கொள்ளப் போகிறாய்! இப்போது நீ வெறுக்கும் நெடுங்கரை அப்போது உன்னை வரவேற்குமா?