பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணுவின் அற்புத ஆற்றல்

5

அணுவாக உடையும்பொழுது முன் உறைந்துகிடந்த ஆற்றல் வெளிப்படுகின்றது. வேதியல் மாற்றத்தில் வெளிப்படும் சூடு இதுதான். அணுவே சிதைந்தழியும்பொழுது இதைப்போல் பல்லாயிரம் மடங்கு சூடு வெளிப்படுகிறது. ஒரு கிராம் எடையுள்ள கரியில் கிடக்கும் அணுத்திரளைகள் சிதைந்து எரிந்தால் எட்டாயிரம் கனலி[1] சூடு எழும். ஆனால் ஒரு கிராம் கரியில் அணுச்சிதைவு ஏற்பட்டால் பதினாறாயிரம் கனலி சூடு வெளிப்படுகிறது. எனவே, அணுத்திரளையின் சிதைவினால் கரி எரியும்பொழுது உண்டாகும் ஆற்றலைவிட அணுவே[2] சிதையும்பொழுது எழும் ஆற்றல் இரண்டுகோடி மடங்கு மிகுதியாகும் என்பதாகின்றது. ஒரு பட்டாணி அளவு நிலக்கரியினைச் சிதைத்து ஒரு கப்பலே அட்லாண்டிக் மாபெருங் கடலைத் தாண்டி ஓடச்செய்யலாம் என்று அறிவியலறிஞர்கள் கணக்கிட்டுக் கூறுகின்றனர். அரை விரற்கடை அளவு நிலக்கரியின் அணுக்களைச் சிதைத்து ஐந்து புகை வண்டியில் ஏற்றிவரும் நிலக்கரி எரிவதால் உண்டாகும் சூட்டினை வெளிப்படுத்தலாம் என்று அறுதியிட்டு உரைக்கின்றனர். அம்மம்ம! அணுச் சிதைவினால் எழும் ஆற்றலை என்னென்றுரைப்பது !

அணுவாற்றலிலிருந்து மின்னாற்றல் : எதிர்காலத்தில் மின்னாற்றலை[3] விளைவிப்பதற்கு அணுவாற்றலில் எழும் சூட்டினைப் பயன்படுத்தலாம். நிலக்கரியின் தொந்தரவு எல்லாம் அன்று ஒழியும் ; அகன்று போகும். போர்க்காலத்தில் புளுட்டோனியத்[4] தொழிற்சாலையில் வெளிப்பட்ட ஏராளமான வெப்ப ஆற்றலை அமெரிக்கர்கள் கொலம்பியா நதியின் நீரைச் சூடேற்றி வீணாக்கினர் ! போர்க்காலத்தில் அவர்கள் செய்தது ஓராற்றால் சரியே என்று கொள்ளினும் அமைதிக்காலத்தில் அங்ஙனம் வீணாக்குதல் கூடாது. அதனை மனித நலனுக்குப் பயன்படுத்துவதில் மனிதன் தன் முழுத் திறமையையும் கொண்டுசெலுத்தவேண்டும். இவ்-


  1. கனலி-calorie.
  2. அணு-atom.
  3. மின்னாற்றல்-electricity.
  4. புளூட்டோனியம் - plutonium.