பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

இருப்புக் கொள்ளாமல் தவித்தது. நெற்றியில் வம்பு பண்ணிக் கொண்டிருந்த சுருள் அலை பாய்ந்த முடிகளை அடக்கி ஒதுக்கிக் கோதி விட்டாள். வெள்ளையாக என்னவோ தெரிந்தது! - நல்லவேளை, நரை இல்லை; மூக்குத்தியை திருகினாள். மார்பகத்தில் உறுத்திக் கொண்டிருந்த கழுத்துச் சங்கிலியைச் சற்றே தளர்த்தி விடலானாள். சங்கிலியில் தாலியா நிழலாடுகிறது! ஊகூம்; பதக்கமே தான்!

காலம் கரைவதாலேதான், காக்கையும் கரைகிறது போலும்!

பால்காரர் வந்து விட்டார் போலிருக்கிறது.

காப்பி ஞாபகம் வந்ததுதான் தாமதம்; ரேவதிக்கு உற்சாகமும் வந்து விட்டது. துண்டும் கையுமாகக் குளியலுக்குத் தயாரானாள்.

வழியிலே, நந்தியாக நின்ற பீரோவுக்குக் கீழே கால்களில் என்னவோ இடறவே, குனிந்தாள். கையில் தட்டுப்பட்ட பொருளைக் கையில் எடுத்தாள்; பார்த்தாள். பார்த்தவள், அதிர்ந்தாள்.

அதிர்ந்தவளுக்கு நெஞ்சத்திலே சுருக்கென்றது. மீண்டும் நெஞ்சில் முள் தைத்து விட்டதோ? நெஞ்சைத் தடவிக் கொண்டே சடுதியில், மீண்டும் பார்த்த போது, அவளைப் பார்க்க விடாமல் தடுத்தது சுடுநீர்க் கண்ணீர்! “இந்தத் திருமணப் படம் பீரோவிலிருந்து வெளியிலே எப்படி வந்திச்சாம்? ஏன் வந்திச்சாம்? ராத்திரி போதை மயக்கத்திலே, போதம் தவறி, என்னவோ தவறு நடந்து விட்டிருக்கலாம்! சரி...சரி... நான் புதிய ரேவதியாக ஆகித்தான் ஏழு ஆண்டு கனவு மாதிரி ஓடிப் போய் விட்டதே! இனி மேல் என்னவாம்?... பணிக்கடன்களை நிறைவேற்ற நாழிகை ஆகி விடவில்லையா?”

பூவின் மணமும் காபியின் மணமும் ஒன்றில் ஒன்றாக கூடிக் குலவிய நேரம்.