46
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
பணம் பெற்றுக் கொண்டு பயிற்சி தரும் பயிற்சியாளர்கள் பெருகினர். ஒலிம்பிக் பந்தயங்களுக்கும் இப்படிப் பட்டவர்கள் தாம், ஆட்களைத் தயாரித்து அனுப்பினர்.
தனிப்பட்ட திறமையை வளர்க்காமல், விளையாட்டுக்களில் வெற்றி பெற வேண்டிய அளவுக்குத் தான் பயிற்சிகளைக் கற்றுத் தந்தனர்.
உடற்கூறு, உடலுறுப்புக்களின் ஆற்றல்கள், உணவு முறை, உடல் திறநிலை, உடற்பயிற்சி, ஓய்வு இப்படிப் பட்ட விஷயங்கள் தான் அதிகமாக இடம் பெற்றன.
விளையாட்டுப் போட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக அவைகளின் தெய்வத்தன்மையை இழந்துகொண்டு வந்தன. பங்கு பெறும் வீரர்களின் எண்ணிக்கைக் குறைய வில்லை என்றாலும், நோக்கத்தில், லட்சியத்தில் மாற்றம் இருந்தது.
பயிற்சிகளில் மருத்துவக் கண்டுபிடிப்புகள் இடம் பெற்றன. பயிற்சியாளருக்கு இம்முறைகள் அதிகமாக உதவின. கடுமையான பயிற்சி முறைகள் குறைந்து, உடல்திற நிலையையே பெரிதும் போற்றி வளர்க்கின்ற எளிய முறைகள் இடம் பெற்றன.
இவ்வாறாக, கிரேக்க உடற்கல்வி முறை, கீர்த்தி மிக்கப் பாரம்பரியத்தை வளர்த்து, கிளர்ச்சி மிக்க வாழ்க்கை முறையை வளர்த்து, வாழ்வாங்கு வாழவைத்தது. இதை மறந்தபோது வீழவும் வைத்தது.
இன்றைய கிரேக்கம்
உலகுக்கு உடற்கல்வியை வளர்த்துக்காட்டிய இன்றைய கிரேக்கம், ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் தேசத்திலிருந்து இறக்குமதியான உடற்கல்வி முறைகளையே பெரிதும் பின்பற்றிக் கொண்டு வருகிறது.