முன்னுரை
உலக நாடுகளில் உடற்கல்வி: ஒரு வரலாற்று ஆய்வு நூல். மேற்கத்திய நாடுகளின் மேன்மையான வளர்ச்சியையும், மேம்பாட்டையும், முன்னேற்றத்தையும் நாம் வியந்து பார்க்கிறோம். பாராட்டுகிறோம் வரலாறு நமக்கு வடித்துக் காட்டுகிற துடிப்பான உண்மையே அது.
அவற்றின் வளர்ச்சிக்கும், வளமான வாழ்வுக்கும் அடிப்படை ஆதாரமாக விளங்கி நின்றது உடற்கல்வியே யாகும்.
வரலாறு என்பது நேற்றைய நிகழ்ச்சிகளின் நிறைவான தொகுப்பு அல்ல. இன்றைய வாழ்வின் எழிலார்ந்த நிலைமைக்கு ஏற்கனவே இடப்பட்ட அடியுரங்கள் அவை.
உலக நாடுகளில் உடற்கல்வி எப்பொழுது தோன்றியது? எப்படித் தோன்றியது? எதற்காக வளர்ந்தது? எவ்வாறு மக்களை வாழ்வித்தது! வழிநடத்தியது! வளர்த்துக்கொண்டே வந்தது என்ற கேள்விகளுக்குக் கிடைத்த பதில்கள், நம்மைப்பற்றி ஒரு விமர்சனம் செய்து கொள்ள உதவுகின்றன அவ்வளவுதான்.
நாம் இன்னும் நிறைய முன்னேற்றம்பெற வேண்டும் என்ற உண்மையில், இரண்டு விதக் கருத்துக்கள் இல்லை.
அந்த முன்னேற்றத்திற்கு உடற்கல்விதான் அடிப்படையாக அமைய வேண்டும் என்பது தான் நமக்குக் கிடைத்திருக்கும் நிதர்சனமான உண்மை.
உடலை உன்னதமாக வளர்த்து, உடன் வாழும் உயிரைப் பொன்முகமாகக் காத்து, மாண்பு மிக்கவர்களாக மக்களை மாற்றி ஏற்றி அமைக்கிற முயற்சிகளை மேற்கொண்டிருப்பது தான் உடற்கல்வியாகும்.
உடல் மூலமாக, உடலுக்குள்ளே, உடலால் கற்பிக்கப் படுகிற கல்வியாக அமைந்திருப்பது தான் உடற்கல்வியின் தனியான தன்மை, மணியான மேன்மை. கனியான கேண்மையாகும்.
உடற்கல்வியை உயர்கல்வியாக, உயிர்க்கல்வியாக ஏற்றுக்கொண்ட நாடுகளே உயர்ந்த நாடுகளாக; உலகிலே தலை சிறந்த நாடுகளாக வாழ்ந்து சென்றன. வழி வழியாக வாழ்ந்து