40
கப்பலோட்டிய தமிழன்
கூலியை அரைப் பங்கு உயர்த்தித் தர முதலாளிகள் ஒப்புக் கொண்டார்கள். பிறகுதான் ஊழியர்கள் வேலைக்குச் சென்றார்கள்.
சிதம்பரம் பிள்ளையின் பேச்சும், தேசிய ஊழியமும் மக்கள் மனதில் நாட்டுப் பற்றைப் பொங்கச் செய்தது. இதைக் கண்டு ஆங்கிலேயர்களது அடிவயிற்றில் நெருப்பைக் கக்கியது. அதிகாரிகள் பயந்தார்கள். தூத்துக்குடியில் எந்தக் கலகமும் ஏற்படாதிருக்க போலீஸ்படை குவிந்தது. பெரும்பாலோர் இதை எதிர்த்தார்கள். ஆனால், வழக்குரைஞர் அரங்கசாமி என்பவர் மட்டும் போலீஸ் குவிப்பை ஆதரித்தார். அவரது மனோபாவத்தை ஊரார் வெறுத்தார்கள்.
ஒருநாள் அரங்கசாமி என்ற அந்த வக்கீல் முக சவரம் செய்து கொள்வதற்காக முடிதிருத்தும் தொழிலாளி ஒருவரை அழைத்தார். சவரம் செய்ய வந்த தொழிலாளி வக்கீலைப் பார்த்து, “நீங்கள் மட்டும் அதிகப் போலீஸ் படை வேண்டும் என்றீர்களாமே” என்று கேட்டார்.
“அதுபற்றி உனக்கென்ன? அது உன் வேலையல்ல” என்றார் வக்கீல். அப்படியானால் உமக்குச் சவரம் செய்வதும் என் வேலையல்ல என்று கூறி, அரைகுறையாகச் செய்த முக சவரத்தோடு அப்படியே நிறுத்திவிட்டு, அந்தத் தொழிலாளி விர்ரென்று சென்றுவிட்டார். அதுபோலவே வேறு தொழிலாளிகளும் அவருக்கு சவரம் செய்ய மறுத்து விட்டார்கள். அதற்கு பிறகு, வக்கீல் ரயில் ஏறி திருநெல்வேலி சென்று மீதியுள்ள அரைகுறை முகசவரத்தைச் செய்து கொண்டு வந்தார். பொதுமக்களுக்கு சிதம்பரம் பிள்ளை மீதும், அவரது லட்சிய முடிவுகள் மீதும் அவ்வளவு ஆழமான பற்றுதலும், மதிப்பும் மரியாதையும் இருந்தது.