14
சடுகுடு ஆட்டம்
இக்கருத்தினை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு, சடுகுடு ஆட்டம் மல்யுத்தத்தின் வழிமரபுச் செயலாக, முன்னோடி விளையாட்டாக மாறி மருவி வந்திருக்க வேண்டும் என்றும், சிலர் அபிப்பிராயப்படுகின்றார்கள். ஏனெனில், மல்யுத்தத்திலே தனி மனிதன் திறமைக்கும், தேக பலத்திற்கும்தான் முதலிடமும் முக்கியத்துவமும் உண்டு. எதிரியை முதுகு மண்பட அழுத்திக் காட்டும் ஆண்மையே மேன்மைமிகு செயலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதால், தனி மனித ஆற்றலுக்கு மல்யுத்தம் சாலச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அதுபோலவே, சடுகுடு ஆட்டத்திலும் தனிமனிதன் ஆட்சியும், ஆண்மைப் போராட்டமும் முக்கிய இடம் பெற்றிருப்பதையும் நடைமுறையில் நாம் கண்கூடாகக் காண்கிறோம். மல்யுத்தத்தில் தேவைப்படுகின்ற தேகபலம் (Strength), விரைவான சுறுசுறுப்பு (Agility), எச்சரிக்கை நிறைந்த விழிப்புணர்ச்சி (Alertness), சடுகுடு ஆட்டத்திலும் நிறைய தேவைப்படுகின்றது என்பதையும் நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது.
அத்துடன்கூட மணற்பகுதியான திடலில்தான் மல்யுத்தம் நடைபெற்றது போலவே, சடுகுடு ஆட்டமும் நடைபெற்று வந்ததால், மல்யுத்தத்திற்கான முன்னோடி விளையாட்டாக, ஆயத்தப் பயிற்சியாக, சிறுவர்கள் இந்த சடுகுடு ஆட்டத்தை விளையாடியிருக்க வேண்டும் என்று விளக்கம் தருபவர்களும் உண்டு.