டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா
41
பலப்பரிட்சையே, இந்த ஆட்டத்தின் அருமை நிறைந்த திறமாகவும் விளங்குகிறது.
இத்தகைய ஆட்டத்திற்கு ஏமாற்றுதல், திடீரென்று முன் பாய்ச்சல் பாய்ந்து பின் வாங்குதல், திடீரென்று திரும்புதல், எதிர்பாராமல் தாக்குதல், காலால் உதைத்தல், மின்னல் வேகத்தில் காலாலும் கையாலும் எதிரியைத் தொடுதல் போன்ற செயல்களை புயலாகப் பாய்ந்து சென்று மின்னலாகத் திரும்பி வருகின்ற வேக அசைவுகளே தேவைப்படுகின்ற அடிப்படைத் திறன் நுணுக்கங்களாகும்.
இதற்கும் மேலாக, இந்த ஆட்டத்தில் பங்கு பெறுபவர்களுக்குத் தசைப்பலமும் தேவைப்படுகிறது. எதிரியைத் தொடும்பொழுது பிடிபட்டு விட்டால், திமிறிக்கொண்டு தப்பித்து வருகின்ற ஆற்றல் வேண்டும். பிடிப்பவராக இருக்கும்பொழுது பாடி வருபவரைப் பிடித்துவிட்டால், எக்காரணத்தைக் கொண்டும் தன் பிடியிலிருந்து விடுபட முடியாதவாறு கரடி பிடி’ பிடிக்கின்ற, குரங்கு பிடி’ போடுகின்ற, உடும்புப் பிடியாக இழுக்கின்ற வகையில், உடலில் சக்தியிருந்தால்தான் முடியும்.
இப்படிப்பட்ட தேக பலம் உள்ளவர்களால்தான் கபாடி ஆட்டத்தைத் திறமையுடன் ஆட முடியும். மன திருப்திக்காகவும், ஆடிய நிறைவு கலந்த சந்தோஷத்துடனும் ஆடி முடிக்க முடியும். அத்தகைய அரிய ஆற்றலை, இனி இரு வகையாகப் பிரித்து, அவற்றின் விவரங்களைத் தொடர்ந்து அறிந்து, தெளிவு கொள்வோம்.