உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொருள் மிக்க பூஜ்யம்

அந்த கன்றுக்குட்டி, புலிப்பாய்ச்சலில் காட்டைக் கிழித்தும், காற்றைப் பிடித்தும், பறப்பதுபோல் பாய்ந்து கொண்டிருந்தது.

ஒரே மலையை, இரு மலையாய்க் காட்டும் மடிப்பு வெளி; மரித்ததுபோல் இறங்குமுகமும், மறுபிறவி எடுத்ததுபோல் ஏறுமுகமும் கொண்ட மலைப்பூமி; இந்த இரு முகங்களுக்கு இடையேயான மலைத்தொட்டில். பூமிப்பெண்ணின் மார்பகமாய் விம்மிப்புடைத்த அந்த மலைப்பகுதியின் ரூபத்தையும், அதற்குத் தாவணி போட்டது போன்ற மேகத்தையும், முக்காடான ஆகாய அரூபத்தையும், எவரும் தத்தம் கற்பனைக்கேற்ப வேறு வேறு வடிவங்களாகவும் உருவகப்படுத்திக் கொள்ளலாம். அப்படிக் கற்பித்துக் கொண்டால், மலைகளே துரளியான அந்தத் தொட்டிலில், ஒரு அசுரக் குழந்தை படுத்திருப்பதாகப் பார்க்கலாம். அப்படிப் பாவித்தால், மண்டிக் கிடக்கும் மரங்களே அந்தக் குழந்தையின் தலைமுடி. நெற்றியே, அதன் சமவெளி. புருவங்களே அதன் புல்வெளி. அருவிகளே அதன் கசியும் கண். வாயே அதன் நீர்ச்சுனை. அதன் மூச்சே பெருங்காற்று.

கனைக்கின்ற அந்த வனத்திற்குள், அந்தக் காட்டு மாட்டுக் கன்று 'ம்மா... ம்மா' என்று கத்தியபடியே, காதுகளை சிலிர்க்கவிட்டு, கால் போட்டுத் தாவியது. அதற்கு ஏற்ப தாளலயமான ஒலிகளும், சுருதிபேத கூக்குரல்களும் கூடவே எழுந்தன. குயில்களின் செல்லச் சத்தம்; வானம்பாடியின் கானச் சத்தம்... பருந்துகளின் பயமுறுத்தும் சத்தம்... ஆந்தைகளின் அலறல்... அத்தனை சத்தங்களும் 'சுயத்தை' இழக்காத கலவைச் சத்தங்களாகவும், சுயம்கலந்த கூட்டுச் சத்தங்களாகவும், இறுதியில் அத்வைத அசரீரி குரலாகவும் ஒலித்தன. அந்த சப்தா சத்தம் காதில் ஏறாமலும், சந்தன வாடையும், ஐவ்வாது வாடையும் மூக்கில் நுழையாமலும், அலறி அடித்து ஓடிக் கொண்டிருந்தது.

ச. 3