20
சமுத்திரக் கதைகள்
ஒரு தாவர மண்டியின் அடிவாரத்திலுள்ள மந்தையிலிருந்து, தன்னந் தனியாய் பிரிந்து தாவித்தாவி பாய்ந்து, பதினாறு வயது மனிதக் குட்டிகளாலும் ஒட முடியாத பாய்ச்சல் போட்ட அந்த மாட்டுக்குட்டியை, எங்கே போகிறாய் என்பதுபோல் மூங்கில்கள் வலிந்தும் வளைந்தும் கேட்டன. ‘போகாதே’ என்பதுபோல் கற்றாழை வழிமறித்துக் கேட்டது. ஆனாலும் அந்தக் கன்று, மூங்கில்களிலிருந்து விலகி, கற்றாழைகளைத் தாண்டி, காட்டுக் கொடிகளை அறுத்து கவனாய் நின்ற இரட்டை மர இடைவெளிகளில் புகுந்த முகத்தை விலக்கி, காட்டுப் பூக்களை மிதித்து, மரக் குவியலுக்குள் புகுந்து, தேக்குமரத் தொகுப்பிற்குள் திசைமாறி, செவ்வாழைகளின் அணிவகுப்பில் ஊடுருவி, குழம்படி இல்லாத அந்த அடர்காட்டிற்குள் தன்க்குத்தானே ஒரு பாதையை ஏற்படுத்திக் கொண்டு பேய்த்தனமாய் ஓடியது. இதன் அவலத்தை புரிந்ததுபோல், மரங்களில் சிறுத்தைகள் ஏறுகின்றனவா என்று கண்காணித்த குரங்குகள், இதை எச்சரித்துக் குரலிட்டன. தொலைவில் தெரியும் காட்டெருமைகள் மேலுதடுகளை விலக்கி திப்பிழம்பு வாயில் வெள்ளொளியாய் பற்கள் தெரிய பார்க்கின்றன. ஆனால் இந்தக் கன்றோ...
ஒவ்வொரு மரமும் ஒரு முட்டுக்கட்டையாக, ஒவ்வொரு கொடியும் ஒரு மூக்கணாங்கயிராக, அத்தனை தடைகளையும் தாண்டித் தாண்டி ஓடியது. 'சிலம்பாடிய மரங்களையும், கிளை பின்னி, இலைவேய்ந்து அந்தக் பகுதியையே ஒரு வீடாக காட்டும் காட்டுச் சங்கமத்தில், மஞ்சள் வெயில் சிந்திய ஒளியையே வழியாக்கியபடி, பாசம், பயத்தைத் துரத்த, வேகம் கால்களைத் துரத்த விரைந்தது. அந்தச் சமயத்திலும், அதன் காலடி அதிர்வுகளால் வெளிக்கிளம்பும் பூச்சிப் புழுக்களைப் பிடிப்பதற்காக, இரண்டு காட்டுக் குருவிகள் அதன் முதுகில் அமர்ந்தன. வேறாரு சமயமாக இருந்தால், அந்தப் பறவைகளின் கால் உராய்வை, முதுகுச் சொறியலாக ரசிக்கக்கூடிய அந்தக் கன்று, இப்போது உடனடியாக நின்று, முகத்தைப் பின்திருப்பி, வாலை முன்திருப்பி அந்தக் குருவிகளைத் துரத்திவிட்டு, முன்கால்களும் பின்கால்களும் ஒரே காலானது போல் மீண்டும் தாவியது.