உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

உலக இலக்கிய வரலாற்றில் ரஷ்யாவின் ஸ்தானம் பெரியது; மிக முக்கியமானதும் கூட. அத்தகைய சிறப்பை ரஷ்யாவுக்குப் பெற்றுத் தந்த இலக்கிய ஆசிரியர்களில் மாக்‌ஷிம் கார்க்கியும் ஒருவர். மற்றவர்களைப் பார்க்கிலும் தனிப்பட்டவர் அவர். உலகின் இதர நாடுகளில் வாழ்ந்து பணியாற்றிய இலக்கிய ஆசிரியர்கள் நடுவில் கூட கார்க்கி முற்றிலும் தனி ரகமானவர் என்றே குறிப்பிட வேண்டும்.

தொல்லைகள் நிறைந்த காலத்தில், குழப்பங்கள் மலிந்த வேளையில், சிறுமைகள் மண்டிக் கிடந்த சமுதாயத்தில், வறுமையும் கொடுமையும் வாழ்ந்த குடும்பம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவர் அவர். உயிர் வாழ்வதற்கே அவர் பலதரப்பட்ட வேலைகளையும் ஏற்று உழைக்கவேண்டியிருந்தது. உணவு விடுதிகளில் சில்லறை அலுவல்கள் செய்வது, கப்பல் தளங்களைத் தேய்த்துக் கழுவுவது போன்ற வேலைகள் முதல் எத்தனையோ அலுவல்களில் அவர் உழன்றிருக்கிறார். ரஷ்யாவில் ஒரு மூலையிலிருந்து மறுகோடி வரை கடந்து திரிந்திருக்கிறார்.இவை எல்லாம் தான் அவருக்குக் ‘கல்லூரிப் படிப்பு’ ஆக அமைந்தன. நல்லவனாக வாழ வேண்டும், மேம்பட்டு உயர வேண்டும் என்ற ஆர்வக்கனல் அவருள் கனன்று கொண்டே இருந்தது. அறிவுப் பசியும் அவருக்கு அதிகம் தான். அதனால், அகப்பட்ட புத்தகங்களை எல்லாம் அவர் படித்தார். தானும் எழுதத் தொடங்கினார்.

ஆதியில், கார்க்கி கற்பனைக்குத்தான் முக்கியத்துவம் அளித்து வந்தார். அவருடைய திறமையைக் கண்டு மகிழ்ந்து, அவர் வளர்ச்சியில் உண்மையான அக்கறை காட்டிய இலக்கிய ஆசிரியர் விளாடிமிர் கொரலன்கோ என்பவர் கார்க்கியின் குறைகளைச் சுட்டிக்காட்டி, பயனுள்ள யோசனைகளையும் கூறினார். தான் சந்தித்த மனிதர்களைப் பற்றியும் கண்ட அனுபவங்களைப்பற்றியும்