14
●சுழலில் மிதக்கும் தீபங்கள்
“வாவ்...! ஃபன்டாஸ்டிக்! கல்பனா தான் அட்ரஸ் குடுத்தா. அவ ரெண்டு மாசம் முன்ன ஆபீஸ் வேலையா வந்திருந்தாளாமே...?”
“ஆமாம் ஒரு நாள் ஃபோன் பண்ணினா...பிள்ளை, அவன் அப்பா, ரெண்டு பேரையும் உன் மாமா சொன்னார்னு ராத்திரிச் சாப்பிடக் கூட்டிட்டு வந்தா. அவன் சவூதிலேந்து வந்து இங்கே ஏதோ இன்டஸ்ட்ரீஸ் ஆரம்பிக்கணும்னு வந்தாப்ல...”
“இப்ப குடும்பமே சரியில்லே. அவன் திடீர்னு நீ பொட்டு வச்சிக்கற, கோயிலுக்குப் போற, நாளைக்கு என் பையனுக்கு கல்யாணம் பண்ணணும்னா நீ இப்படி இருந்தா எப்படின்’னு வம்பு பண்றான் போல. இவளோ நல்ல வேலை, பதவி. ‘போடா போ, உன் பணமும் வேண்டாம். குடும்பமும் வேண்டாம்’னு வர வேண்டியது தானே?வெளிலசொல்லிக்கல...வேதனை... எல்லாரும் ரோக்ஸ், ராஸ்கல்ஸ்...பதினைஞ்சு வருஷத்துக்குப் பிறகு, இப்ப ப்ளேட்ட, மாத்திப் போடறான், பணத்திமிர் இவளவ்வளவு படிப்புக்கூட அவனுக்குக்கிடை யாது, வெறும் மெக்கானிக்காத்தான் இருந்தான். ஏதோ போனான் நல்ல பணம் வந்திருக்கு. இப்ப, நீ தலையில துணியப் போட்டுக்க, பேரை மாத்திக்கன்னு நிர்ப்பந்தம் பண்றான்...”
கிரி பேசவில்லை. கல்பனா கல்லூரியில் அவளுக்கு ஒரு வருடம் இளையவள். அவள் கல்லூரி நாட்களில் வீட்டுக்கு வருவாள். இவளுக்கும் தந்தையில்லை; அவளுக்கும் தாய் மட்டுமே இருந்தாள். அந்த சிநேகத்தில், நாலைந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு இருதாய்மாரும் எங்கோ கோவிலில் சந்திக்கையில்தான் கிரிஜாவுக்கு இந்த வரனைக் கொண்டு வந்தார்கள்.
கல்பனாவின் தந்தை, பாட்டியின் முதல்தாரத்தின் மகன். தகப்பனார் உயிருள்ள போதே சொத்தைப்பிரித்துக் கொண்டு சென்று, குடித்துக் குடித்துத் தீர்த்துவிட்டான். பிறகு நோய் வாய்ப்பட்டுச் செத்தான். தந்தை இருந்த நாட்களிலேயே