10
டால்ஸ்டாய் கதைகள்
‘சரி சரி, சின்ன வண்டியே போகட்டும்’ என்று சொல்லிக் கொண்டே அவன் குதிரையை இழுத்து சட்டத்திற்குள் ஓட்டினான். அறிவுள்ள அந்தக் குதிரை இத்தனை நேரமும் அவனைக் கடிப்பதுபோல் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தது.
சமையல்காரியின் கணவன் துணைபுரிய நிகிட்டா வண்டியில் குதிரையைப் பூட்டினான். எல்லாம் ஒரு மாதிரியாக நிறைவேறியதும் அவன் அந்த ஆளை, வைக்கோல் எடுத்து வருவதற்காகத் தொழுவுக்கும், முரட்டுக் கம்பளித்துணி ஒன்றைக் கொண்டு வருவதற்காகக் களஞ்சியத்திற்கும் அனுப்பி வைத்தான்.
‘உம், இப்ப சரியாப் போச்சு. அடே அடே! இது மாதிரி சிலிர்ப்பு காட்டாதே’ என்று கூறிக்கொண்டே, மற்றவன் எடுத்து வந்த புத்தம் புதிய வைக்கோலை வண்டிக்குள் திணித்து அமுக்கினான். ‘இப்போது சாக்கை இதன் மேலே பரப்புவோம். அதற்குமேலே கம்பளியை விரிப்போம்’ என்று சொல்லிக்கொண்டு, சொல்லுக்குத் தகுந்தாற்போல் செயல் புரிந்தான். கம்பளியை இழுத்து, வைக்கோல் வெளியே தெரியாதபடி மூடித் திணித்து, உட்காருவதற்கு வசதியாக இடம் அமைத்தான் அவன்.
‘அன்பரே, உமக்கு வந்தனம். எப்பவுமே ஒருவனுக்கு இரண்டு பேராக வேலை செய்தால் எல்லாம் வெகு சீக்கிரத்தில் முடிந்துவிடும்’ என்று நிகிட்டா சொன்னான். பித்தளை வளையத்தினால் இணைக்கப்பட்டிருந்த தோல்வார்களைப் பிடித்தவாறே அவன் வண்டிக்காரன் இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டான்.