iv
டால்ஸ்டாய் கதைகளில் அநேகம் தமிழில் வெளிவந்து விட்டன. ஆயினும், 'இரண்டு பேர்’ எனும் நெடுங்கதை இதுவரை தமிழில் வரவில்லை.
மரண பயம் மனிதரை வேட்டையாடிக் கொண்டே இருக்கிறது. தான்—தனக்கு—தன்னுடைய என்ற குறுகிய நினைவுகளோடு வாழ்கிற வரையில் தான் மரணம் மனிதரை பயமுறுத்தும், தன்னை மறந்து, பிறருக்கு உதவத் துணிகிற போது, மனிதன் மரண பயத்தை வென்றுவிடுகிறான். அதுவரை அவனுக்குக் கிட்டாத மன அமைதி தானாகவே அவனை வந்து அடைகிறது.—இவ் உண்மையை விளக்குவதற்காக டால்ஸ்டாய் இரண்டு கதைகள் எழுதினார். அவற்றில் ஒன்று தான் ‘இரண்டு பேர்’. இக்கதையில் மனித உள்ளத்தின் போராட்டங்களையும், இயற்கை வெறியின் தன்மைகளையும், மிருகங்களின் நுண்ணறிவையும் பற்றி அழகாகச் சித்தரித்திருக்கிறார்.
டால்ஸ்டாய் கதைகளில் சிறந்தவைகளுள் முக்கியமானது ‘குற்றமும், தண்டனையும்’.
டால்ஸ்டாய் கதைகளைத் தமிழாக்கும் வாய்ப்பை எனக்கு அளித்து, அவற்றைப் புத்தகமாகப் பிரசுரிப்பதில் அக்கறை கொண்டு ஆர்வம் காட்டிய அலைய்டு பப்ளிஷிங் கம்பெனி உரிமையாளர்கள் எஸ். ஆர். எஸ். சகோதரர்களுக்கு எனது இதயபூர்வமான நன்றி உரியது.
வல்லிக்கண்ணன்