பக்கம்:தமிழ் இனம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

தமிழ் இனம்

தையும் பௌத்தத்தையும் ஒடுக்க நேர்ந்த போராட்டத்தில் வைதிகர், சைவர், வைணவர் ஆகிய இந்துக்கள் (இந்து என்பது பிற்காலப் பெயர்) தம்முள் இருந்த சாதி வேறுபாடுகளை ஓரளவு மறந்திருந்தனர். மேற் சொன்ன இரண்டு சமயங்களும் ஒடுக்கப்பட்ட பின்பு, மீண்டும் இவ்வேறுபாடுகள் தலை தூக்கின. இச் சாதி வேறுபாடுகள் சோழப் பேரரசிலும் நிலைபெற்றன. சில சாதியினர் குடிமக்களுக்கு உரிய சில உரிமைகளை இழந்திருந்தனர் என்பதைக் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.

ஒரே இனத்தில் இழிநிலை

தமிழினம் இவ்வாறு எண்ணிறந்த பிறவி பற்றிய சாதிகளாகப் பிரிக்கப்பட்ட காரணத்தால் நாளடைவில் வலிமையிழந்தது; இவ்வலிமையின்மையே தமிழ் மன்னர் ஆட்சி அழியவும் ஒரு காரணமாக இருந்தது. கோவிலுக்குள் இன்ன வகுப்பார் இறைவன் கருவறையில் போகலாம், இன்னவர் இடை மண்டபத்தில் இருக்கலாம், இன்னவர் முன் மண்டபத்தில் நிற்கலாம், இன்னவர் முன் மண்டபத்திற்கும் வெளியே நிற்றல் வேண்டும், இன்னவர் கோவிலுள் வரலாகாது, என்ற வரையறைகள் ஏற்பட்டன. பொதுமக்கள் வரிப்பணங் கொண்டு கட்டப்பட்ட கோயில்களில் பொது மக்கள் நிலை இவ்வாறாயிற்று. அவரவர் தொழிலின்படி வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற மனுதர்ம முறைப்படி, மக்கள், இன்று நுகரும் உரிமைகளை இழந்து, வாழ்ந்தனர் என்று கூறுதல் மிகையாகாது. ‘கண்டால் தீட்டு’, ‘தொட்டால் தீட்டு’ என்று சொல்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/13&oldid=1371605" இலிருந்து மீள்விக்கப்பட்டது