பக்கம்:தமிழ் இனம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. திருக்குறள்

முனனுரை

திருக்குறள் இத்தமிழகத்தில் தோன்றிய நாள் தொட்டுப் பின்வந்த புலவர்பெருமக்கள் அனைவரும் அதன் கருத்துக்களைத் தாம் இயற்றிய பெருங்காப் பியங்களிலும், சிறு காப்பியங்களிலும், தோத்திர நூல்களிலும், புராணங்களிலும், உலா, பிள்ளைத்தமிழ், தூது முதலிய பிரபந்தங்களிலும் எடுத்தாண்டுள்ளனர். தமிழில் வேறு எந்த நூலுக்கும் இல்லாத இந்தப் பெருமை திருக்குறள் ஒன்றுக்கே பொருந்தியிருக்கிறது. உலகில் மக்களாகப் பிறந்தவர் பின்பற்ற வேண்டும் சிறந்த கருத்துக்களை யெல்லாம் கூறுவது திருக்குறள் ஒன்றே. -

பிள்ளைப்பேறு, பிள்ளையின் கல்வி, பிள்ளையின் இல்லறவாழ்க்கை, மனைவியின்கடமை, பிள்ளைக்குத் தந்தை செய்யும் கடமை, தந்தைக்குப் பிள்ளை செய்ய வேண்டும் கடமை முதலிய இல்லறம் பற்றிய செய்திகள் திருக்குறளில் இடம்பெற்றுள்ளன. இவ்வாறே, ஒருவன் சமுதாயத்தில் யாரோடு பழக வேண்டும், யாருடன் பழகுதல் கூடாது என்பன போன்ற சமுதாய வாழ்க்கை முறைகளும் திருக்குறளில் இடம் பெற்றுள்ளன. மனிதன் உழவனாகவோ வணிகனாகவோ அல்லது அரசாங்க அலுவலனாகவோ இருக்கவேண்டுபவனாவான். இவ்வொவ்வொரு துறையில் பழகும் மனிதனும் அறிந்திருக்க வேண்டும் அறிவுரைகள் திருக்குறளில் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/24&oldid=1356856" இலிருந்து மீள்விக்கப்பட்டது