பக்கம்:தமிழ் இனம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 தமிழ் இனம்

நாடாளும் வேந்தனுக்கு வேண்டும் இலக்கணங் களும், அமைச்சர் தகுதியும், பிற அலுவலர் இலக்கணங்களும் திருவள்ளுவரால் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அருள் ஒழுக்கம் கொண்ட அந்தணர், முற்றும் துறந்த முனிவர், உலகைப் படைத்துக் காத்து அழிக்கும் கடவுள் முதலியோர் பற்றியும், அவர்களிடம் மக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பன போன்ற விவரங்களும் திருக் குறளில் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தையும் நோக்கும்போது, திருக்குறள் மனிதனது வாழ்க்கையைச் சித்தரித்துக் கூறும் நூல் என்பதை எளிதில் உணரலாம். இந்த உண்மைகளை உளம்கொண்டு

திருக்குறளை ஊன்றிப் படித்தல் வேண்டும்.

திருவள்ளுவர் காலம்

‘திருவள்ளுவர் தொல்காப்பியரை அடுத்து வாழ்ந்தவர். எனவே அவரது காலம் ஏறத்தாழக் கி. மு. மூன்றாம் நூற்றாண்டு என்று கூறலாம்’ என்று டாக்டர் சோமசுந்தர பாரதியார் கருதுகின்றார். திருவள்ளுவர் கி. மு. முதல் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்தவர் என்று மறைமலையடிகள் குறித்துள்ளார். திருவள்ளுவர் கி. பி. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டினர் என்று பேராசிரியர் S. வையாபுரி பிள்ளை அவர்கள் கருதுகின்றனர்.

எட்டுத்தொகை நூல்களில் திருக்குறட் கருத்துக்களும் அடிகளும் சீர்களும் வந்திருத்தலைக்காண, திருக்குறள் இன்றுள்ள தொகை நூல்களுக்குக் காலத்தால் முற்பட்டிருத்தல் வேண்டும் என்று கருதுதல் பொருத்தமாகும். அங்ஙனம் நோக்கின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/25&oldid=1356862" இலிருந்து மீள்விக்கப்பட்டது