பக்கம்:தமிழ் இனம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள்

35

பொருந்தாது என்பது தெளிவு. துறவி தன் குடும்பத்தைத் துறந்த பொழுதே பற்றற்றவனாகிவிடுகின்றான். இல்வாழ்வான் ஒருவனே தன் முன்னோர் புகழையும் நினைவையும் நிலை நாட்டும் கடமையுடையவனாகிறான். ‘இந்த இல்லறத்தான் இன்னவனுக்கு மகன்; இன்னவனுக்குப் பெயரன்’ என்று உலகத்தார் சொல்லுதல் மரபாதலின், இல்வாழ்வான் தன் முன்னோர்களை அடிக்கடி எண்ணும் கடமை உணர்ச்சி உடையவனாக இருத்தல் வேண்டும் என்பதை வற்புறுத்தவே திருவள்ளுவர் முதற்கண் தென்புலத்தார் என்று கூறினார் என்று கொள்ளுதலே ஏற்புடையது.

தெய்வம்

அடுத்துவரும் ‘தெய்வம்’ என்னும் சொல்லுக்குப் பரிமேலழகரும் மணக்குடவரும் ‘தேவர்’ என்று பொருள் கொண்டனர். இச்சொல்லுக்கு ‘வழிபடு தெய்வம்’ என்று பரிதியாரும், ‘கடவுளர்’ என்று காலிங்கரும் பொருள் கொண்டனர். இங்ஙனம் நால்வரும் மூவகையான பொருள் கொண்டிருத்தல் படிப்பவரைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறதன்றோ? ‘தேவர்’ ' அமுதம் உண்பவர்; நம்மைப் போல உணவு உண்பவரல்லர். மேலும் இல்லறத்தான் தேவர்க்கு என்ன செய்யவேண்டும், ஏன் செய்ய வேண்டும் என்பதும் விளக்கப்படவில்லை. வழிபடு தெய்வம் என்று கொள்ளினும், இல்லறத்தான் தன் வருவாயில் ஆறில் ஒரு பங்கு அதற்கு எங்ஙனம் செலவழித்தல் இயலும்? இல்லறத்தான் மனவழிபாடு கொள்வானாயின் அப்பூசனை சிறப்புடையதாகுமன்றோ? எவரை வழிபடுவதாயினும் பொருட் செலவின்றியே வழிபடலாமன்றோ? அதுவே சிறப்புடை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/32&oldid=1357785" இலிருந்து மீள்விக்கப்பட்டது