பக்கம்:தமிழ் இனம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

தமிழ் இனம்

யது என்று நூல்கள் கூறும். காலிங்கர் குறிப்பிடும் ‘கடவுளர்’ என்னும் சொல்லும் மயக்கம் தருவதாக இருக்கின்றது. ஆனால் சமண சமயத்தவர் என்று கருதப்படும் காலிங்கர் கடவுளர் என்று கூறுதல், இக்காலத்தில் கண்ணுக்குப் புலப்படாத கடவுளர் என்ற பொருளில் இருத்தல் இயலாது என்று கருத இடமுண்டு. கடவுள் என்னும் சொல் இப்பொழுது பரம்பொருளைக் குறிக்கின்றது. ஆனல் பண்டைக்காலத்தில் இச்சொல் முற்றத்துறந்த முனிவர்க்கும் வழங்கப்பட்டது.

“தென்னவற் பெரிய துன்னருந் துப்பிற்
றொன்முது கடவுள் பின்னர் மேய
வரைதாழ் அருவிப் பொருப்பிற் பொருந”


என வரும் ‘மதுரைக்காஞ்சி’ அடிகளிலுள்ள ‘கடவுள்’ என்னும் சொல்லுக்கு ‘முனிவன் ஆகிய அகத்தியன்’ என்று நச்சினார்க்கினியர் பொருள் கூறியுள்ளார்; இத்துடன் அமையாது, கலித்தொகையில் உள்ள கடவுள் பாட்டைச் சுட்டிக்காட்டி, “இருடிகளையும் கடவுள்” என்று கூறியவாற்றானும் காண்க,” என்று விளக்கம் தந்துள்ளார். இவர் சுட்டியுள்ள கலித்தொகைப் பாடலில் தலைவன் தலைவியை நோக்கி,

“உடனுறை வாழ்க்கைக் குதவி யுறையுங்
கடவுளர் கட்டங்கினேன்”

என்று கூறுகின்றான். இங்குக் கடவுளர் என்ற சொல் முனிவரைக் குறித்தல் காண்க. இளங்கோ அடிகளும் முனிவர்களைக் கடவுளர் என்று கூறியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/33&oldid=1357792" இலிருந்து மீள்விக்கப்பட்டது