பக்கம்:தமிழ் இனம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4. ஐந்திணை அமுதம்

ஐந்திணையாவன குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்பன. இவை மலைநாடு, காட்டுநிலம், பாலைநிலம், வயற்பகுதி, கடற்கரை என நிலவகை யாகவும், புணர்ச்சி, பிரிதல், இருத்தல், ஊடல், புலம்பல் என 'ஒழுக்கவகை'யாகவும் அகப் பொருளில் முறையே பொருள்படும். குறிஞ்சி நிலத்தில் புணர்ச்சி (களவு) நிகழும் ; என்றால், ஏனை நிலங்களில் அது நிகழாதெனல் பொருளன்று; கருத்துமன்று. புலவர்கள் பழந்தமிழர் வாழ்க்கையைச் சித்திரித்துக் காட்டப் பல காட்சிகளை அமைத்தனர், அக்காட்சிகளே மேற்கூறிய குறிஞ்சி முதலியன. மிகப் பழைய காலத்தில் தமிழர் கையாண்டுவந்த மணமுறை இன்னது ‘ என்பதை அறிவிப்பதற்கே புலவர் அகப்பொருளை ஓர் ஓவியமாகச் சித்திரித்துக் காட்டுகின்றனர். இவ்வகப் பொருட் களவு, தலைவன், தலைவி, பாங்கி, பாங்கன் என நால்வர் வயப்பட்டிருக்கும்போது களவு எனப்படும். இது தலைவியின் பெற்றாேர்க்கு அறிவிக்கப்பட்டுப் பின் தலைவனும் தலைவியும் பலர் அறிய இல் வாழ்க்கை நடத்துவாராயின் அம்முறை 'கற்பு' எனப்படும். தலைவன் தலைவியை நடத்தும் ஒழுக லாறும், தலைவி தலைவன நடத்தும் ஒழுகலாறும் கற்பிக்கப்படுதலின் 'கற்பு’ எனப் பெயர் பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/39&oldid=1507208" இலிருந்து மீள்விக்கப்பட்டது