பக்கம்:தமிழ் இனம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை

“தமிழ் இனம்” என்னும் பெயர் கொண்டு வெளிவரும் இந்நூல், ‘தமிழ் இனம்’ என்னும் கட்டுரையை முதற் கட்டுரையாகப் பெற்றுள்ளது. இதனை அடுத்து, தமிழர் பெற்ற தனிச் செல்வமாகிய அகப்பொருள் இலக்கணம் பற்றிய செய்தியும், திருக்குறள், எட்டுத்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை, பாரதம், மனோன்மணியம் என்னும் இலக்கிய நூல்களைப் படிப்பவர்க்கு அறிமுகப்படுத்தும் கட்டுரைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள சாக்கையர் கூத்துப் பற்றிய விளக்கமும் இன்று மலையாள நாட்டில் உள்ள சாக்கையர் பற்றிய செய்திகளும் ‘சாக்கையர் கூத்து’ என்னும் கட்டுரையில் இடம் பெற்றுள்ளன. இயல்பாக நடைபெற்றிருக்க வேண்டிய சமுதாய நிகழ்ச்சி தெய்வீகம் கற்பிக்கப் பெற்று, இதிகாசத்தில் வழிபாட்டுக்குரிய நிலையில் இடம் பெற்றுள்ள நிலையை விளக்க எழுந்ததே ‘ஐவருக்கு மனைவி’ என்னும் கட்டுரையாகும். இக்கட்டுரையில், வேதகாலம் முதல் இன்றளவும் ஒருத்தி பலருக்கு மனைவியாக இருந்தமைக்கும் இருந்து வருதற்கும் சான்றுகள் தரப்பட்டுள்ளன.

இலக்கிய நயமும் ஆராய்ச்சித் திண்மையும் பெற்று விளங்கும் இக்கட்டுரைகள், தமிழ் இலக்கியச் செய்திகளை அறிவதற்கும் அவ்வத் தமிழ் நூலினைப் படிக்கவேண்டுமெனத் தூண்டுவதற்கும் துணை செய்யும் என்று நம்புகிறேன்.

இதனை நன்முறையில் வெளியிட்டுதவிய காரைக்குடி - செல்வி பதிப்பகத்தார்க்கு எனது நன்றி உரியதாகுக.

மா. இராசமாணிக்கனார்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/4&oldid=1363096" இலிருந்து மீள்விக்கப்பட்டது