உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

அ.ச. ஞானசம்பந்தன்



அப்படியே பயன்படுத்த வேண்டும் என்கிறது இலக்கணம். மேலும் ஒருபடி சென்று, அவ்வாறு சேரி மொழியைப் பயன்படுத்திப் பாடுகையில் அதிற் சொல்லப்பட்டவற்றைக் கேட்பவர்கள் எளிதில் அதன் பொருளை அறிந்து கொள்ளக் கூடிய முறையில் அமைய வேண்டுமாம். 'தேர்தல் வேண்டாது’ என்ற சொற்களால் ஆராய்ந்து பாராமலே பொருள் தெரிய வேண்டும் என்றும் தொல்காப்பியம் கூறுகிறது.

சேரி மொழிகளைப் பயன்படுத்தி இயற்றப் பெற்ற ஒரு நூல், அதனைப் படிப்பவர்கள் அறிவை அதிகம் பயன்படுத்தாமலே பொருளை அறிந்து கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டுமாம். அத்தகைய நூல் எதுவாக இருக்கும்? தொல்காப்பியனார் செய்யுளியலிற் கூறியுள்ள பாடல்கள், தொடர் நிலைச் செய்யுள் ஆகிய அனைத்தும் அறிவின் துணை கொண்டு அப்படி இருக்கப் புலன் என்ற அழகு ஒரு நூலுக்கு இருக்கிறது என்றால் அது எதுவாக இருக்கும்? நிச்சயமாக 'நாடக நூலா'கத்தான் இருக்க முடியும். ஆம்! நாடகம் ஒன்று மட்டுமே சேரி மொழியைப் பயன்படுத்தி இயற்றப் பெற முடியும். உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்று இரண்டாகப் பிரித்து உலக வழக்கு அப்படியே செய்யுள் வழக்கில் இடம் பெறாது என்று கூறியுள்ளார் ஆசிரியர். அப்படியானால் உலக வழக்கிலும் தாழ்ந்ததாகிய சேரி மொழியைப் பயன்படுத்தும் நூல் எதுவாக இருத்தல் கூடும்? நாடகம் ஒன்றில் மட்டுமே சேரி மொழி பயன் படுத்தப்படுவதை யாரும் தவறாகக் கருதமாட்டார்.

மேலும் ஒன்று அறியப்படவேண்டும்.