பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


சில காலம் நீண்டு செல்வதாக' என்பதே அவ்வாழ்த்துதலின் பொருளாகும். பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்தாலும் அதற்கொரு முடிவுண்டு. ஆதலின், இவ்வாழ்த்துக்கள் அந்த முடிவை இன்னும் சில காலம் தள்ளிப்போடுவதற்குப் பயன்படுமே தவிர வேறெவ்விதப் பயனையும் தருவதில்லை.

அப்படியிருக்கப் பிறப்பு, இறப்பு இல்லாதவனாகிய இறைவனை வாழ்த்துவது பொருளற்றதாகிவிடும் அன்றோ! ஆனால் தேவர்கள் ஏன் இறைவனை வாழ்த்துகிறார்கள்? சாவாமருந்து என்று நினைத்து அமுதை உண்டபின்னும் சாவு நெருங்கி வருகின்றதென்பதை அறிந்த தேவர்கள், நஞ்சை உண்டும் சாவாதிருக்கின்ற ஒருவனை வாழ்த்தக் காரணமென்ன? உண்மையில் அந்த வாழ்த்து அவனைக் குறித்து எழுந்ததன்று. அவனை வாழ்த்தி வாழ்த்தித் தாம் மேலும்மேலும் வாழவேண்டும்; ஏனையோர் அனைவரும் தம்மை வணங்கிப் பணிபுரியவேண்டும் என்ற ஆவலினாலுமே அவனை வாழ்த்துகின்றனர்.

தேவர்களாக ஆகியும்கூட அவர்கள் எவ்வித வளர்ச்சியும் அடையாமல் தம் வாழ்நாளை நீட்டிக்க வேண்டும்; தம்மை அனைவரும் தொழவேண்டும் என்ற அற்ப ஆசையினால் உந்தப்பெறுகிறார்கள் என்பது குறிப்பெச்சம்.

அதிகாரத்தின் எல்லையில் நின்றவர் ஆதலால், இனித் தம்மைப் பிறர் தொழவேண்டும் என்று அடிகளார் விரும்பவில்லை. சேவடிகள் தீண்டப்பெற்றுப் பிறவிப் பயனைப் பெற்றுவிட்டவர். ஆதலால், வாழ்நாளை நீட்டிக்க வேண்டும் என்ற விருப்பமும் அவருக்கில்லை.

அடியார் கூட்டத்தினிடையே இருக்கவும், திருவடிகளைத் தொட்டு வணங்கவும் திருப்பெருந்துறையில் வாய்ப்புக் கிடைத்ததல்லவா? அந்த வாய்ப்புக்