பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 31


ஆனால், தில்லையில் ஸ்தூல வடிவுடன் நட்டம் பயில்கிறவனைப் பற்றிக்கொண்டு உறவு கொண்டாட முடியும். ஆதலால் ‘எம் பெரியானே’ என்றார்.

தில்லையில் உள்ள ஸ்தூல வடிவிலும் அடிகளார் மிகுதியும் ஈடுபாடு கொண்டது அந்தத் திருவடியிலேயே ஆகும். காரணம் திருவாதவூரர் என்ற மனிதரை ஒரே கணத்தில் மணிவாசகராக மாற்றியது அத்திருவடியே ஆதலால், அதன்மாட்டுத் தனி ஈடுபாடு கொண்டார். அதன் பயனாகவே 'சிறியேனை ஆட்கொண்ட பெய் கழல்’ என்ற தொடர் அடுத்து வருகின்றது.

தம்மை மாற்றிய இப்பெய்கழலுக்கு எவ்விதம் நன்றி பாராட்ட முடியும் என்று நினைத்த அடிகளார், வேறு ஒன்றும் செய்ய முடியாவிடினும் மணம் நிறைந்த மலர்களை இட்டாவது தம் நன்றிப் பெருக்கினைக் காட்டவில்லையே என்று வருந்துகிறார். அதுதானும் முடியாவிட்டாலும் அந்தத் திருவருளை நினைந்து 'வியந்து அலறேன்' என்கிறார். எதிர்பாராத ஒன்று ஒருவரை எதிர்ப்படும்போது அங்கு வியப்புத் தோன்றும். மனத்தில் தோன்றிய வியப்பு ஒ! ஆ! என்ற ஒலிகள் மூலம் வெளிப்படும். இந்த ஒலிகள் நீளும்பொழுது அலறலாகப் பரிணமிக்கும். கனவேயும் தேவர்கள் காண்பு அரிய கனை கழலோன். நனவே எனைப்பிடித்து ஆட்கொண்ட (திருவாச244) நினைவு தோன்றுந்தோறும் நன்றிப் பெருக்கால் அந்தக் கழலுக்கு மலர் துரவி, அலறவேண்டும் என்று தோன்றுகிறது. இவை இரண்டையும் செய்யஇயலாமையின் 'விரையார்ந்த மலர்துவேன் வியந்து அலறேன்' என்று கூறுகின்றார்.

மலர் தூவுதலும் வியந்து அலறுதலும் ஒரோவழி நடக்கக்கூடிய செயல்களே தவிர, இருபத்து நான்கு மணி நேரமும் நடைபெறக்கூடியவை அல்ல. ஆனால், சதா சர்வகாலமும் அந்த நன்றியை நினைந்து நினைந்து