உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 ★ வல்லிக்கண்ணன்

"பக்கத்து வீட்டுப் பருவ மச்சான். பார்வையிலே படம் புடிச்சான்!” என்று அதற்குரிய நீட்டல் நிறுத்தல்களோடு பாட்டிழுத்தாள் வசந்தா.

அவள் காட்டிய வீட்டின் வராந்தாவில் ஓர் இளைஞன் பொழுது போகாமல் முழித்துக் கொண்டிருந்தான். கலர் பார்வையில் பட்டது என்றால் அவன் கண்களில் மின்னல் தெறிக்கும். பளிச்சென்ற வர்ணத்தில் பாவாடை-தாவணி அணிந்து வந்த சின்னச் சிட்டுக்கள் அவன் கவனத்தைக் கவர்ந்தன–பார்த்தான்.

அவன் பார்த்ததை வசந்தா கவனித்துவிட்டாள். எனவேதான் பாடினாள்.

“டீ, அவர் உன்னைத்தாண்டி பார்க்கிறார்” என்றாள் காஞ்சனா.

“இல்லைடி, உன்னைத்தான்” என்று மறுப்புரை டகார்னு தெறித்தது. வசந்தாவின் வாயிலிருந்து.

“இல்லை, உன்னைத்தான்!” என்ற சொற்களை வைத்துக் கொண்டு இரண்டு பேரும் ‘டக் ஆஃப் வார். பண்ணினார்கள். அதில் அவர்களுக்கு ஓர் உற்சாகம்’ போரடிப்புக்கு ஏதோ கொஞ்சம் மாற்று!

“அவர் காதில் விழப்போகிறதடி, வசந்தா!” என்று முணமுணத்தாள் காஞ்சனா.

“விழுந்தால் எனக்கென்ன, நானா அவரை லவ் பண்ணப் போறேன்?” என்று சிநேகிதி சீண்டினாள்.

“நான் ஒண்ணும்...” என்று இழுத்த காஞ்சனாவுக்கு வெட்கம் மேலிடவே, பேச்சுக்குப் போட்டாள் ‘ஸ்டன் பிரேக்’.