தோழி, நல்ல தோழிதான்!
"உந்தன் மனநிலையை நான் தெரிந்து கொண்டேனடி தங்கமே தங்கம்!" என்று சொல்லி, வளைகள் கலகலக்கும்படியாகக் கைகொட்டி, களி துலங்கும் குலுக்குச் சிரிப்பு சிந்தினாள் ராஜம்மா.
"என்னைத்தையடி கண்டு விட்டாய் பிரமாதமாக?" என்று சிடுசிடுத்தாள் தங்கம்.
அவள் சிநேகிதி சிரித்தபடி சொன்னாள்: "நெல்லுக்குள்ளே அரிசி இருக்கிறது. எள்ளுக்குள்ளே எண்ணெய் கலந்திருக்கிறது. உன் மனசுக்குள்ளே காதல் புகுந்திருக்கிறது. இதை எல்லாம்தான்."
தங்கம் பதில் பேசவில்லை. தோழியின் விழிகளைச் சந்திக்க மறுத்த அவளுடைய அஞ்சனம் தோய்ந்த கண்களும், செம்மை படர்ந்த முகமும், தலை தாழ்ந்து கொண்ட நிலையும் 'ராஜம்மா பொய் சொல்லவில்லை' என்று விளம்பரப்படுத்தின.
"என் அருமைத் தங்கம் டாக்டரிடமும், தோழியிடமும் உள்ளதை உள்ளபடி சொல்லிவிட வேண்டும், தெரியுமா? மனசில் உள்ளதை வெளிப்படையாகச் சொன்னால்தான் நன்மை பிறக்க வழி ஏற்படும். அதனாலே, என்னிடம் சொல்வாய் தோழி. உன் உள்ளம் கவர்ந்த கள்வன் யாரோ? என்ன பேரோ? எந்தத் தெருவோ?" என்று நீட்டி நீட்டிப் பேசினாள் ராஜம்மா.