உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv

அடைந்துள்ள ஈடு இணையில்லாத முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ந்தது என் கல்வி உள்ளம். முதன்முறை 1961 ஆம் ஆண்டு இந்தியக் கல்விக் குழுவின் உறுப்பினனாகச் சென்று வந்ததும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். உள்ளதை உள்ளபடியே படம் பிடித்துக் காட்டுகிறேன்.

நான் எழுத்தாளனல்லன். கருத்தாளனாக அவாவுகிறவன். என்னையும் எழுத்துலகில் தள்ளிவிடுகிறார்கள் நண்பர்கள்.

முதன்முதலில் திருவாளர் காஞ்சி கல்யாணசுந்தரம் அவர்கள் 'குமார விகடன்' ஆசிரியராக இருந்தபோது, சில கட்டுரைகள் தமிழில் எழுதும் நெருக்கடியில் என்னைச் சிக்க வைத்தார். பின்னர், இந்திய விடுதலைக்கும், சாதி ஒழிப்பிற்கும், பகுத்தறிவுப் பரவலுக்கும், எல்லாவற்றிற்கும் மேலாகப் பொதுவுடைமை இயக்கத்திற்கும் அருந்தொண்டாற்றி மறைந்த தோழர் ப. ஜீவானந்தம் அவர்கள் 1934-35ஆம் ஆண்டுகளில் புது உலகம் மாத இதழில் என்னை எழுதவைத்துப் பார்த்து மகிழ்ந்தார்.

முன்னாள் 'கங்கை'யின் ஆசிரியரும் இந்நாள் 'சத்திய கங்கை'யின் ஆசிரியருமான திருவாளர் பகீரதன் அவர்கள், சோவியத் ஒன்றியம் பற்றிய கட்டுரைகளை எழுத வைத்துவிட்டார். அவரது இனிய தூண்டுதல் இல்லையேல், சோவியத் ஒன்றியத்தில் நான் கண்டறிந்தவை ஊமையன் கனவாகியிருக்கும். அவருக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.