வல்லிக்கண்ணன் & 45 அது எனக்கு நினைவு வந்தது. பேரொளியுடன் தோன்றியது செட்டி வெள்ளியோ, அல்லது விடிவெள்ளிதானோ எதுவாகவும் இருந்து விட்டுப் போகட்டும். நான் நடக்க வேண்டியதுதான் என்று நடக்கலானேன். - திருமங்கலம் ஊர் வந்தது. தெரு விளக்குகள் நன்றாக எரிந்து கொண்டிருந்தன. வீணாகத்தான் எரிந்தன. ஊர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. ஒரு உயிர்கூட அசைவுகாட்டவில்லை. நாய்கள் கூட அங்கும் இங்கும் முடங்கித் துரங்கிக் கொண்டிருந்தன. நாய்கள் விழித்து என்னைப் பார்த்தும் உரத்த குரலெடுத்துக் குரைக்கக் கூடாதே எனும் பயம் என்னுள் எழுந்தது. ஆகவே காலடி ஒசைப்படுத்தாமல் மெதுவாகவே நடந்தேன். பயந்தபடி எதுவும் நடந்துவிடவில்லை. நடக்க நடக்க, இருள் விலகி விடிவின் வெளிச்சம் பரவி சுற்றுப்புறங்களை நன்கு புலப்படுத்தியது. நான் திருப்பரங்குன்றம் வந்திருந்தேன். அங்கே ரஸ்தாவை ஒட்டிப் பரந்து கிடந்த பெரியகுளம், தண்ணிர் நிரம்பிக் காணப்பட்டது. அதில் ஆண்களும் பெண்களும் நீராடிக் கொண்டிருந்தார்கள். நானும் குளத்தில் இறங்கிக் குளித்தேன். சுகமாக இருந்தது. வேறு வேட்டி கட்டிக்கொண்டு, ஈரவேட்டியையும் துண்டையும் அங்கேயே நின்று உலரவைத்தேன். காற்றடித்ததால் அவை விரைவில் உலர்ந்துவிட்டன. நான் வீட்டைவிட்டு வெளியேறிய மூன்றாவது நாள் அது. முதல் நாள் திருநெல்வேலியிலிருந்து கோவில்பட்டிக்கு 35 மைல்கள் நடந்திருந்தேன். இரண்டாம் நாள் கோவில்பட்டியிலிருந்து விருதுநகருக்கு 30 மைல்கள். அங்கிருந்து மதுரைக்கு 30 மைல்கள், ஆக மூன்று நாள்களுக்குள் மதுரைக்கு நடந்து வந்தாச்சு என்று மனம் ஆனந்தப்பட்டது. இன்னும் மதுரை நகரை அடையவில்லையே என்ற நினைப்பும் எழுந்தது. இப்பதானே மூன்றாவது நாள் விடிந்திருக்கிறது என்ற எண்ணமும் தலைகாட்டியது. சிறிதளவு எஞ்சியிருந்த அவலைத் தின்று முடித்தேன். மதுரை நகருக்கு வெளியே, திருப்பரங்குன்றம் சாலையில் ஒரு மைல் தூரத்தில் உள்ள அரசுக் கட்டிடங்களில் பல பயிற்சி நிலையங்களும் அலுவலகங்களும் இயங்கிக் கொண்டிருந்தன.
பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/46
Appearance