உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிழல் முகங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IX

இந்தப் படைப்பிற்கு கட்டியம் கூறியவரும், இடதுசாரி இலக்கிய வாதிகளின் பேனா பிடித்த கைகளை தூக்கி விட்டவரும், செம்மலர் இதழின் அப்போதைய ஆசிரியருமான திரு. கேம். எம். முத்தையா அவர்கள் சுட்டிக் காட்டும் கட்டியத்தையும், பின்பக்க அட்டையில் பிரசுரித்திருக்கிறேன்.

பெரியவர். வல்லிக்கண்ணன் அவர்கள் கட்டிக்காட்டியதைப்போல், ஒடும் ரயிலை மையமாக வைத்து, இலக்கியமாகவும், அதற்கு எதிரியாகக் கருதப் படும் எளிமையாகவும் இனிமையாகவும் இதனைப் படைத்திருக்கிறேன். இது முதல் பதிப்பானபோது, நான் சரக்கு முடுக்கை மட்டுமே நம்பிக் கொண்டு இருந்தேன். அது மட்டும் கை கொடுக்காது என்பது, இப்போது அதிகமாகவே புரிந்துவிட்டது. காரணம், பல நல்ல நாவல்களை இருட்டடிப்பு செய்வது, இன்றைய குழு மனப்பான்மை எழுத்தாளர்களுக்கும் அவர்களின் தாசாதி தாசர்களுக்கும் ஒரு கை வந்த கலையாகிவிட்டது. என்றாலும், இப்போது காலம் மாறிவிட்டது. முன்புபோல், நல்ல நாவல்களை, நான் குறிப்பிட்டவர்கள் இருட்டடிப்பு செய்துகொண்டே இருந்தாலும், அப்படிப் பட்டவர்கள் இலக்கிய இருட்டுக்குள் சிக்கப்போவதும், இன்றைய தமிழ்நாடு முற்போக்கு இளம் படைப்பாளிகள்தான் இந்த நூற்றாண்டின் இலக்கியத்தை தீர்மானிக்கப் போகிறார்கள் என்பதும் ஒரு சமூக, கலை இலக்கிய வரலாற்றுக் கட்டாயமாகப் போகிறது.

கூடவே, இலக்கியப் பிதாமகன் கலைஞரின் மேலான தலைமையில், தமிழக அரசு அமைத்திருக்கும் புதிய அமைப்பான தமிழ் இலக்கிய சங்கப் பலகையின் குறள்பீடம், தகுதி இருந்தும் காணாமல்போன விந்தன் போன்ற அந்தக் கால படைப்பாளிகளையும், காணமல் செய்யப்படும் இன்றைய தகுதி மிக்க படைப்பாளிகளையும் எல்லா மொழிகளுக்கும் கொண்டு செல்லும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.

இந்த நாவலுக்கு ஆய்வுக்கூட்டம் நடத்திய ரயில்வே தொழிலாளர்களுக்கு என் நன்றி உரித்தாகும்.

இந்த படைப்பை அருமையாக பிரசுரித்ததோடு, சிறப்பாக முகப்போவியத்தையும் வழங்கிய மணிவாசகப் பதிப்பகத்தின் உரிமையாளர் பேராசியர். ச. மெய்யப்பன் அவர்களுக்கும், அவரது அருமைச் செல்வன் சோமு அவர்களுக்கும், மேலாளரான தோழர் குருமூர்த்தி அவர்களுக்கும், இந்தப் பதிப்பகத்தின் இதரத் தோழர்களுக்கும் என் நன்றி. இது வாடிக்கையான நன்றி அல்ல; என் அனுபவத்திலும் இனிய நினைவுகளிலும் சேமிப்பாகிப்போன ஒரு நினைவு. இதற்கு இன்னொரு பெயர்தான் நன்றி.

அன்புடன், சு. சமுத்திரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/11&oldid=588149" இலிருந்து மீள்விக்கப்பட்டது