உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிழல் முகங்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV

மனிதாபிமானமும் நிறைந்த ரயில் மனிதர்களால் பாதுகாக்கப்படுகிறாள். ஒடும் ரயிலில் தொடர்ந்து அவளுக்கு ஏற்படும் அனுபவங்கள் நாவலின் விறுவிறுப்பபுக்கும் வளர்ச்சிக்கும் துணைபுரிகின்றன. பிரயாண முடிவில் அவளுக்கு நல்வாழ்வும் பிறக்கிறது.

ஒடிக்கொண்டிருக்கும் ரயிலில் நடைபெறும் இந்த நாவல் பல்வேறு இயல்புகள் கொண்ட ரகம் ரகமான மனிதர்களை ரசமாக அறிமுகம் செய்து வைக்கிறது. பயணிகளான இரண்டு பெண்களையும், அவர்களது கவனத்தைக் கவரப் பெரிதும் முயலும் ஒரு இளைஞனையும் வாசகர்கள் எளிதில் மறந்துவிட முடியாதுதான்.

ஒரு கோட்டுக்கு வெளியே என்ற படைப்பின் மூலம் குறிப்பிடத் தகுந்த நாவலாசிரியராகத் தெரிய வந்த நண்பர் சு. சமுத்திரம், ஊருக்குள் ஒரு புரட்சி சத்திய ஆவேசம் போன்ற நாவல்களின் வாயிலாகவும், மற்றும் பலப் பல சிறுகதைகளின் மூலமும் தனது எழுத்தாற்றலையும், சமுதாயப் பார்வையையும், அகண்ட மனிதநேயத்தையும் புலப்படுத்தியிருக்கிறார். பல்வேறு துறைகளிலும் அதிகார வர்க்கத்தினரிடையிலும், மண்டி வளர்கிற சிறுமை களையும் குறைபாடுகளையும் முற்போக்குச் சிந்தனை வேகத்துடனும், அறச் சீற்றத்துடனும், போற்றப்பட வேண்டிய மெய்த் துணிவோடும் அவர் எடுத்துச் சொல்லிவருகிறார். இச்சீரிய பண்புகள் இந்த நாவலிலும் சுடர்விட்டு ஒளிர்கின்றன.

இந்த நாவலில் குறிப்பிட்டாக வேண்டிய இன்னொரு புதுமையையும் நண்பர் சு. சமுத்திரம் சேர்த்திருக்கிறார். ஒடும் ரயிலில் நிகழ்கிற இந்தக் கதை தமிழ்நாடு, இலங்கை, மலேசியா ஆகிய பிரதேசங்களைத் தழுவிக் கொண்டிருக்கிறது. இது அவருடைய விசாலப் பார்வையை உணர்த்துகிறது. நண்பர் சமுத்திரத்தின் இதர நாவல்களைப் போலவே, இந்த நிழல் முகங்கள் நாவலும் ரசிகர்களால் வரவேற்று பாராட்டப்படும் என்பதில் சந்தேகமில்லை.

நண்பர் சமுத்திரத்துக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

- வல்லிக்கண்ணன்

10, வள்ளலார் பிளாட்ஸ்,

புதுத் தெரு, லாயிட்ஸ் ரோடு,

சென்னை - 600 005.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/6&oldid=588136" இலிருந்து மீள்விக்கப்பட்டது