நூல் தேர்வு (Book Selection) என்பது நூலகத்திற்கு, வேண்டிய நூல்களைத் தேர்ந்தெடுத்தலாகும். நூல்களைத் தேர்ந்தெடுத்து நூலகங்களில் வைப்பது ஒரு முக்கியமான வேலையாகும். நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்து அவைகளை நூலகத்திற்கு வாங்குவது நாட்டிற்கு மட்டுமல்ல மக்களுக்கும் நலம் பல விளைவிப்பதாகும். நூலகத்திற்கு வருகின்ற மக்கள் மனத்தினை ஈர்ப்பவை நல்ல நூல்களே. நூலகம் மக்களுக்கு அறிவும் உணர்வும் ஊட்டும் பயனுள்ள பாசறையாய் விளங்குவதற்கு நல்ல நூல்களே துணைபுரிகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களை எடுத்துச் சென்று படிப்பதில் மக்கள் அளவிலா ஆர்வம் காட்ட வேண்டும் : பயன் மிகப்பெற வேண்டும்.
அறிவியலில் வீறுபெற்றிலங்கும் இன்றைய உலகிலே நாடோறும் அளவிறந்த நூல்களும் பருவவெளியீடுகளும் வெளிவருகின்றன. வெளிவரும் நூல்கள் அனைத்தும் பயனுள்ளவையாக இரா. மேலும் வெளிவரும் அத்தனை நூல்களையும் வாங்கும் திறன்பெற்ற நூலகங்கள் ஒரு சிலவே. எனவே நூல் தேர்வு இன்றியமையாத தாகின்றது. பொருள்நிலை, நூல்களின் தேவை, மக்களின் விருப்பம், வழங்கும்மொழி, புதிய பதிப்பு என்ற ஐந்தினையும் மனத்திற்கொண்டு நூல்களைத் தேர்ந்தெடுத்தால் நூலகம் தொடர்ந்து வளரும் இயல்பிற்றாய ஓர் உயிர்ப் பிண்டமாக உயர்வு பெறும் என்பதில் ஐயமின்று. நூல் தேர்வு நல்ல முறையில் செய்யப்பட்டால்தான் மக்களும் தம் மனக் கோட்டம் ஒட்டும் மாண்புறு நூல்களைப்