பழம் தமிழகத்தில் “எண்ணும் எழுத்தும் மாந்தர்க்குக் கண்ணெனத் தகும்” என்னும் கொள்கை நன்கு நிலைபெற்றிருந்தது. கலைக் களஞ்சியங்களாகிய நூல் நிலையங்களைப் போற்றும் புலவர்களும், பொருளறிந்து தேற்றும் புலவர்களும் அந்நாளில் சிறந்து விளங்கினர் என்பது நாலடியாரால் அறியப்படுகின்றது. “நல்ல நூல்களின் தொகுதியே உண்மையான பல்கலைக் கழகம்” என்று கார்லைல் என்னும் ஆங்கில நாட்டு அறிஞரும் கூறிப்போந்தார். இக்காலத்தில் நூலகத் துறை வளர்ச்சியில் அறிஞரும் பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர். அன்னாரது ஊக்கம் மேன்மேலும் வளர்ந்து ஓங்க வேண்டுமாயின் நூலகக் கலையின் நுணுக்கங்களை அவர்கள் நன்கு தெரிந்து கொள்ளுதல் வேண்டும். இக்கலையைப் பற்றிய நூல்கள் ஆங்கிலத்தில் பலவுண்டு. நம் தாய் மொழியாகிய தமிழிலும் இக்கலையைப் பற்றிய நூல்கள் வெளிவரல் வேண்டும் என்பது என் ஆசை. அந்த முறையில் இப்போது வெளிவந்துள்ள “நூலக ஆட்சி” என்னும் இந்நூலை ஆர்வத்தோடு வரவேற்கிறேன்.
இந்நூலாசிரியரை எனக்கு இளமையிலிருந்தே நன்கு தெரியும். ஆங்கிலம், தமிழ் என்னும் இருமொழிகளையும் கற்றுத்தேர்ந்து, ஆசிரியப் பயிற்சியும், நூலகப் பயிற்சியும் பெற்று நூல் நிலையத்திலேயே பணியாற்றுகின்றார். நல்ல தமிழார்வமிக்க இவரால் எழுதப்பட்ட இந்நூல் புதியதொரு முயற்சி; அரியதொரு படைப்பு. சென்னை, தில்லி பல்கலைக்கழகங்களில் நூலகப் பயிற்சி வகுப்புக்குரிய