உமது தியாகத்தின் பலிபீடமாகத்தான் நீர் என்னை கருதுவீர். அது எனக்கு வேண்டாம். நான் காதலைக் கேட்கவில்லை. நான் தேடுவது பாசம்’ என்கிறாள் சரசு.
‘அது என்னிடம் இருக்கிறது’ என்று அவன் சொல்ல, ‘அப்படியானால் திருமணம் வேண்டாம். பாசம் இருந்தால் போதும்’ என்று சொல்லி அவள் தலை குனிந்தாள்.
‘இரகசியம் பாபம் அல்லவா? கல்யாணம் இதை நீக்கி விடுமே?’
‘எனக்கு உமது தியாகம் வேண்டாம். உமது பாசம் இருந்தால் போதும்.’
‘நீ ஒரு பரத்தை!’
‘உமது தியாகத்திற்கு நான் பலியாகமாட்டேன். அதில் எப்பொழுதும் உமக்கு இந்தக் காலத்து நன்மதிப்பு ஏற்படும். தைரியசாலி என்பார்கள். அதை எதிர்பார்க்கிறீர். நான் பரத்தையன்று. நான் ஒரு பெண். இயற்கையின் தேவையை நாடுகிறேன்’ என்றாள் அவள்.
அவன் மனம் கலங்கி விலகிப் போகிறான். மறுநாள் அவள் பிரேதம் கிணற்றில் மிதந்தது என்று புதுமைப்பித்தன் கதையை முடிக்கிறார்.
இந்தக் கதையின் பெயர் ‘வாடா மல்லிகை’ விதவையாகி விட்ட போதிலும் ஒரு பெண், தனது இயற்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக, ஒரு ஆணுடன் திருமணம் புரிந்து கொள்ளாமலே பாசப் பிணைப்பு பெற விரும்புகிற எண்ணமே அந்நாட்களில் வெகு துணிச்சலான சிந்தனையே ஆகும். இன்றைய சமூகத்தில்கூட அது சகஜமான நிகழ்ச்சி என்று ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை.
‘வழி’ என்றொரு கதை. அதில், விதவைப் பெண் அலமு, அந்த நிலைமையினால் குமுறிக் கொதிப்படைகிறாள். ஒவ்வொரு நிமிஷமும் நெருப்பாக தகிக்கும் சதி அல்லவா வைதவ்யம் என்று புழுங்குகிறாள். எதிர் வீட்டில் கணவனும் மனைவியும் உல்லாசமாகப் பழகுவதைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு வீட்டினுள் வந்து படுக்கையில் விழுகிறாள். அங்கே கிடந்த கொத்துச் சாவியில் உள்ள முள்வாங்கி மார்பில் குத்தி, அவள் நெஞ்சின் பாரம் போக ஒரு சின்ன வாசல் செய்கிறது. அவள் எழுப்பிய அலறல் கேட்டு தந்தை ஒடி வருகிறார். இரத்தம் பெருகுவதைக் கண்டு பதறுகிறார். அவளோ ‘இந்த இரத்தத்தை அந்த பிரம்மாவின் மூஞ்சியில் பூசிடுங்கோ. வழியை அடைக்காதீர்கள்’ என்று கூறியபடி உயிரை விடுகிறாள்.