பொருந்தாத் திருமணம் விஷயத்திலும், பெண் பிறர் எதிர் பார்க்கிறபடி நடந்துகொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை; அவள் நினைப்பும் போக்கும் தனித் தன்மை உடையதாக இருக்கவும்கூடும் என்று புதுமைப்பித்தன் உணர்த்துகிறார். ‘கல்யாணி’ என்ற கதை இதற்கு நல்ல சான்று ஆகிறது.
கல்யாணி ஒரு கிழவருக்கு இளையதாரமாக வாழ்க்கைப்பட்டவள். அவரிடம் அவளுக்கு இன்பம் கிடைப்பதில்லை. அத்துடன், அவர் சதா மூத்த தாரத்தின் புகழ்பாடி இவளைக் குறை கூறுவதில் சந்தோஷம் காண்பவராகவும் இருக்கிறார். அவ்வூருக்கு வந்த ஒவியர் சர்மா அவர்கள் வீட்டில் தங்குகிறார். கல்யாணியின் நிலைமை அவருடைய அனுதாபத்தைத் தூண்டுகிறது. அவள் அழகு அவரது அன்பையும் ஆசையையும் கிளறுகின்றது. ஒரு நாள் அதிகாலையில் ஆற்றங்கரையில் அவ் இருவருக்கும் உறவு ஏற்படுகிறது. அவளை தன்னுடன் வரும்படியும், எங்காவது துரத்து ஊரில் போய் இருவரும் சந்தோஷமாக வாழலாம் என்றும் சர்மா அழைக்கிறார். கல்யாணி அதற்கு இசையவில்லை. ஆனால் அவரை அங்கேயே தங்கிவிடும்படி கோருகிறாள். அவர் போய்விடுகிறார்.
மனிதர்கள் உணர்ச்சிவசப்படுகிறவர்கள். அவர்கள் இந்த விதமாத் தான் செயல்புரிவார்கள்-செயல் புரியவேண்டும்-என்று திட்ட வட்டமாக யாரும் கணித்துவிட இயலாது. இதை வாழ்க்கை நிரூபித்துக் கொண்டிருக்கிறது. இந்த உண்மையை புதுமைப்பித்தன் தனது கதைகள் மூலம் பிரதிபலிக்கிறார் என்று கூறலாம். ஆண் சிங்கம், சணப்பன் கோழி போன்ற கதைகளும் இதற்கு உதாரணம் ஆக அமையும்.
உலக இலக்கியத்தில், பேய் பிசாசுகளைக் கதைப் பொருளாகக் கொண்டு பயங்கரக் கதைகளும் நாவல்களும் ஏராளமாகத் தோன்றி உள்ளன. அந்தப் போக்கைப் பின்பற்றி புதுமைப்பித்தன் தமிழில் பயங்கரக் கதைகள் பலவற்றை எழுதியிருக்கிறார். பயம் எனும் உணர்ச்சி மனிதர்களை எப்படி எல்லாமோ ஆட்டுவிக்கிறது. பேய் பிசாககள் பற்றிய நம்பிக்கையை வளர்க்கிறது. இந்த உணர்வை ஆதாரமாக்கி, மக்களின் நம்பிக்கையை அடித்தளமாக்கி, சொற்களைக்கொண்டு கலைத் திறமையோடு பின்னப்பட்ட கதை ‘காஞ்சனை’. புதுமைப்பித்தனின் சிறந்த சிறுகதைகளுள் இதுவும் ஒன்று. பேய் ஒரு வீட்டில் வேலைக்காரியாக வந்து வசிப்பது, அந்த வேலைக்காரியை முற்றாக நம்பிவிடும் மனைவியின் இயல்புகள், புதியவளை சந்தேகிக்கிற கணவனின் பயமும் குழப்பங்களும் முதலியவற்றை திறமையாக வர்ணிக்கும் கதை. இப்படி நடக்குமா என்பதைவிட,