பெஞ்சமின் ஃபிராங்ளினின்
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
மனிதன் என்பவன் யார்? என்ற வினாவுக்கு விளக்கமான விடைகளை விளக்கிய மாமேதை பெஞ்சமின் ஃபிராங்ளின் என்று பெருமகனார்.
உலகம் ஒரு சிந்தனைப் புத்தகம்! அதில், பெஞ்சமினின் தனி மனித முன்னேற்றம் என்ற வாழ்க்கை வரலாறு, ஒரு தங்கத் தகடாலான பக்கமாக அமைந்துள்ளது.
அந்த மனிதப் புனிதனைச் சூழ்ந்துள்ள மக்கட் சமுதாயம் சிறக்க, அதற்கான புதிய புதிய கண்டு பிடிப்புகளைக் கண்டு பிடித்து, அவற்றைத் தனது அடையாளங்களாக நிலை நிறுத்தி, வாழ்ந்து மறைந்த அவரது சேவைகள் மற்றொரு தங்க ஏடாக உள்ளது.
தோன்றிய தனது நாட்டுக்காக, அல்லும் பகலும் அயராது சிந்தித்து சிந்தித்து அரும்பணிகள் ஆற்றி, செயற்கரிய செயல்களைச் செய்து, அவர் மறைந்தாலும் அண்ணாரது தொண்டுகள் மறையாமல் நின்று புகழ்க் கொடியை வானளாவ, உலகளாவ பறந்து கொண்டிருக்கும் அற்புதங்கள் பற்பல பக்கங்களாக சிறந்துள்ளன.