இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தமிழ் இலக்கணம்
ஐந்தாம் வகுப்பு
I.எழுத்து
1. இலக்கணம் என்றால் என்ன?
மக்கள் தங்களது எண்ணத்தை ஒருவருக்கு ஒருவர் வெளிப்படுத்திக் கொள்ளுகிறார்கள். அவ்வாறு அவர்களது கருத்தை வெளிப்படையாக வெளிப்படுத்தலே மொழியாம்.
இவ்வுலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. ஆங்கிலேயர் ஆங்கிலம் பேசுகின்றனர். ஆந்திரர் தெலுங்கு பேசுகின்றனர். ஆங்கிலம், தெலுங்கு என்பன மொழிகளாம். அது போலவே நமது மொழியாகிய தமிழும் ஒரு மொழியாம்.
முதன் முதலில் ஒவ்வொரு மொழியும் பேச்சு முறையில் உரு எடுத்தது. பின் அவ்வொலி இலக்கியங்களாக அமைந்தன. இவ்வாறு ஒவ்வொரு மொழியிலும் பல இலக்கியங்கள் தோன்றலாயின. வசனமும் பாட்டுமே இலக்கியங்களாம்.