உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

11

கிறார்கள். இதுபோலவே கவிதையின் கவிதை, இசையின் இசை, ஓவியத்தின் ஓவியம் என்று பிறர் மனத்தில் தோன்றிய வாழ்க்கையின் நிழல்களைக் கலைப்பொருளாக்கிப் படைக்கிற போலிக் கலைஞர்கள் பெருகிவிட்டார்கள்.

போலிக் கலையை இவ்வாறு கண்டனம் செய்யும் டால்ஸ்டாய் புதுமையைப் (originality) பெரிதும் வற்புறுத்தியுள்ளார். இவரது மூலமந்திரம், "கலையின் பிரதிபலிப்புக்கு அடிப்படை வாழ்க்கையே" என்பதுதான்.

மாபெரும் படைப்பாளிகள் இலக்கியச் சூத்திரங்களைக் கற்றுக்கொண்டு படைப்பதில்லை. வாழ்க்கையை ஓர் உலகக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் கண்டுதான் இலக்கியம் படைக்கிறார்கள். ஆயினும் அழகியலின் பொதுவிதிகள் அவர்களுடைய படைப்பு முயற்சிகளுக்குத் துணை செய்கின்றன. அழகியல் மரபை அவர்கள் தங்கள் முன்னோர்களான கலைஞர்களிடமிருந்தும் தம் காலத்துக் கலைஞர்களிடமிருந்தும் கற்றுக் கொள்ளுகிறார்கள்.

தற்காலச் சோவியத் எழுத்தாளர்கள், சோசலிச நாடுகளின் எழுத்தாளர்கள், கார்க்கி, மாயகாவ்ஸ்கி மரபில் வளர்ந்தவர்கள். கார்க்கி கூறினார்:

நமது கலை உருவங்களில் தனித்துவம் இருக்கவேண்டும். அவற்றின் உள்ளடக்கங்களில் சோசலிஸ்டுத் தன்மை, லெனினியக் கண்ணோட்டம் இருக்கவேண்டும்.

மாயகாவ்ஸ்கி கூறினார்: "எல்லா வகையான கவிஞர்களும் தேவை" (இங்கு மாயகாவ்ஸ்கி உருவ வகைப்பாடுகளைக் குறிப்பிடுகிறார்).

சோசலிசப் படைப்பாளிகளுக்கு வழிகாட்டுவதும் துணை நிற்பதும் மார்க்சீய அழகியல் அறிவு, தங்கள் நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்குச் சோசலிசமே வழியெனவும், சமாதானமும் நட்புறவும் அவசியம் எனவும் கருதும் முற்போக்குக் கலைப்படைப்பாளிகளுக்கு இதுவே துணை நிற்கிறது.

இந்நூல் 'தாமரை'யில் கட்டுரைத் தொடராக வெளி வந்தது. இதனை நூலாக வெளியிட எனது ஞானபுத்திரன் டாக்டர் மே.து. ராசு குமார் முன்வந்தான். பல முற்போக்குப் படைப்பாளிகளும் வேண்டினர். தாமரையில் வெளிவந்த கட்டுரைகளில் புரியாத இடங்கள், முரண்பட்ட பொருள் தரும் பகுதிகள் ஆகியவை பற்றியெல்லாம் எழுத்தாளர் நண்பர்கள் எனக்கு எழுதினார்கள். நூலாக மாற்றி எழுதும்போது அவ்விடங்களையெல்லாம் மாற்றிச் செம்மைப்படுத்தியுள்ளேன்.