உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மார்ட்டின் லூதரின்
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்


1. ஜான் ஹல், சவதோலா
கொல்லப்பட்டது— ஏன்?

உலகத்தில் ஒரு கொள்கையை முதன் முதலாகக் கண்டுபிடித்து உருவாக்குபவர்கள் உண்டு! அதே இலட்சியத்தைக் கண்டு பிடித்தவருக்குப் பிறகு பின்பற்றி, அதை உலகின் மக்கள் மனதில், பரவச் செய்பவர்களும் உண்டு!

முன்னவர் இந்த உலகத்திற்கு வழிகாட்டியாக விளங்குபவர். ஏனென்றால், அவர் புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்தச் சிந்தனையாளர்! உலகம் வாழ்வதற்காக, மக்கள் அதைப் பின்பற்றுவதற்காக, அதனால், அந்த நாடும், சமுதாயமும் முன்னேறுவதற்காக தூற்றுதலையும் ஏசலையும், உடல் வேதனைகளையும், இறுதியாக, உயிரையே தனது லட்சியத்திற்கு விலையாகக் கொடுத்து மறைந்தவர்!

உலகம் உள்ளளவும், காரும் கடலும் உள்ளனவும், மண்ணும் விண்ணும் உள்ளளவும் அவரது புகழ் சாகாது;மறையாது அழியாது; ஒருவேளை மீறி அழித்தாலும் அதனையும் மீறி எழும்புமளவுக்குச் சிந்தனை வளமும்திறமும் உள்ளது என்பதால் அந்தச் சிந்தனாவாதி உலகுக்கு வழிகாட்டியாக நின்று வாழ்கின்றான்!