பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

கொள்ளப்பட்டேன். எனது குரு-எனது இறையுணர்த்திய அருட்சுனையின் அருகிலிருப்பதை உணர்ந்தேன்; அநுபூதி பெற்றேன். சொற்களால் விவரிக்க முடியாத தொரு அமைதி என்னுள்ளே என் உடலில் புகுந்து பரவச நிலைக்கு உயர்த்தியது; உந்தியது.

மீண்டும் சுய உணர்வு பெற்றபோது இதற்கு முன் முறை வந்ததைப் பற்றி எண்ணலானேன்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலிருக்கும். அப்போது எனக்கு வயது இருபதுதானிருக்கும். தந்தை இறந்தார். குடும்பமோ பெரிது. சம்பாதித்துக் குடும்பத் தைக் காக்க வேண்டிய நிலை. பல்கலைக் கழகப் படிப்பு, பட்டம், வாழ்க்கையின் உயர் மதிப்புகள் பற்றிய எல்லாச் சிந்தனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வாழ்க்கையில் ஈடுபட்டேன்.

வாழ்வின் புதிய சுமைகளையும், துக்கத்தையும் தாங்கிக் கொண்டிருந்த ஆரம்ப நாட்கள் அவை. வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டத்தின் எதிரொலி எங்கும் கேட்டது. நாட்டிலே எங்கும் குழப்பம். யுத்தத்தின் எதிரொலி எங்கள் வாசலில் கேட்டது.

வயிற்றுப் பிழைப்புக்கு ஏதாவது ஓர் உத்தியோகம் செய்தாக வேண்டும் என்ற நிலை. உள்ளூரிலே செய்த முயற்சி எதுவும் பயன்தரவில்லை. பங்களுருக்குப் போனால் வேலை கிடைக்கும் என்று சொன்னர்கள். உடனே ரயிலேறினேன். பங்களுர் சென்றேன். வேலை தேடினேன். வெற்றி.