உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

வல்லிக்கண்ணன் கதைகள்


‘பத்து நிமிடம் கூட வரவில்லை அவர். என்னவோ நாமும் படத்திலே நடிச்சிட்டோம் என்று பேருக்கு வந்து போகிறார் நம்ம பண்ணையார். ப்சு, இவ்வளவுதானா!’

உள்ளுர் ரசிகர் ஒவ்வொருவரின் மனமும் செய்த விமர்சனம் இதுதான். என்றாலும் தியேட்டர்காரருக்கு திருப்தி .

“படம் இரண்டு வாரம் வெற்றிகரமாகப் போகும். நம்ம பண்ணையார் நடித்த படம் என்பதுக்காக சிவபுரம்காரர்கள் எல்லோரும் படத்தை, கண்டிப்பாகப் பார்த்துப் போடுவாங்க."

(சினிமிக்ஸ், 1984)


மனம் செய்யும் வேலை!

Page வார்ப்புரு:Largeinitial/styles.css has no content.வாழ்க்கை விசித்திரமானது.

அது மனிதரை எப்படி எல்லாமோ பாதிக்கிறது. ஒவ்வொருவரையும் வெவ்வேறு விதமாக பாதித்து விடுகிறது. சிலர் சில சமயம் அடியோடு மாறிப் போகிறார்கள்.

இதற்கெல்லாம் மனம் எனும் மாய சக்தி தான் அடிப்படைக் காரணம் என்று சொல்ல வேண்டும்.

காத்தமுத்து இதற்கு ஒரு நல்ல உதாரணம் ஆவான்.

முரடன் என்று பெயர் வாங்குவதில் அவனுக்குத் தனி மகிழ்ச்சி இருந்தது. சின்ன வயசிலிருந்தே.

வீண் வம்புகளை நாள்தோறும் அவன் வளர்த்து வந்தான். இரவில் வெகுநேரம தெருவில் சுற்றித் திரிவான். அதனால் ‘இராக் காடு வெட்டி’ என்று பலர் அவனைக் குறிப்பிடுவது வழக்கம்.

இருட்டில் எந்த இடத்துக்கும் தனியாகப் போய்வர அஞ்சாதவன் அவன். ‘பூச்சி பொட்டு கிடக்கும். ஒரு வேளையைப் போல இன்னொரு வேளை இருக்காது’ என்று பெரியவர்கள் எச்சரிக்கும் போது, "ப்சா! சாப்பிட்டுது போ!' என்றோ, ‘கிழிச்சுது!’ எனவோ, எடுத்தெறிந்து பேசுவான்.

காத்தமுத்து துணிந்த கட்டை. பேய் பிசாசு என்றெல்லாம் சொல்லி அவனை மிரட்டி விட முடியாது. ‘பேயாவது கீயாவது! நம்மைக் கண்டாலே அதுகள்ளாம் பயந்து பம்மிவிடும்! என்று கூறி, அட்டகாசமாய் சிரிப்பான் அவன்.