உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

வளர்ப்பு மகள்

அவள் அண்ணன்மார்கள், சொக்கலிங்கத்தை "அடிப்பேன் பிடிப்பேன்" என்றார்கள். இவ்வளவுக்கும், அவருக்கு, மறுமண ஆசை ஏற்படவே இல்லை. யாரோ சொன்னார்கள். இவரும் யாருக்கோ என்பது மாதிரி கேட்டார். அவ்வளவுதான்.

டாக்டர்கள் தனது கர்ப்பப்பையில் கோளாறு இருப்பதால் குழந்தை பிறக்காது என்று சொல்லிவிட்டாலும், பார்வதி அசரவில்லை. ஓர் ஆயுர்வேத டாக்டரின் யோசனைப்படி கணவனுக்கு, பாயாசத்தில், பச்சை முட்டையை உடைத்தும், பாதாம் பருப்பைப் பாலில் கலந்தும் கொடுத்தாள். விளைவு, சொக்கலிங்கம் வெளியே எட்டிப் பார்க்கத் துவங்கினார். இந்த விவகாரங்களை, ஜன்னல்களை எட்டிப்பார்த்துப் புரிந்துகொண்ட பார்வதி, கணவனுக்கு, பாதாம் பருப்பு வசதிகளை நிறுத்தியதோடு, இரவில் தலைவலி என்று சாக்குச்சொல்லி, புருஷனை பட்டினிப் போட்டாள். சொக்கலிங்கம் சரியானார். ஆனால் எப்படியாவது ஒரு பிள்ளை வேண்டும் - எந்தப் பிள்ளையையாவது எடுத்து வளர்க்க வேண்டும் என்று விரும்பினார்.

விவகாரத்தை, தங்கை சொல்வதற்கு முன்பாகவே, 'அரவை மில்' ஒற்றர்கள்மூலம் புரிந்துகொண்ட, பார்வதியின் சகோதரர்கள், தத்தம் பிள்ளைகளைக் காட்டி, "இந்தா பிடி" என்றார்கள். யார் பிள்ளை தத்துக்குப் போவது என்ற விவகாரத்தில் அந்த சகோதரர்களே, ஒருவருக்கொருவர் மனங்கோணி, அடிக்காத குறையாகப் பேசிக்கொண்டார்கள். இறுதியில், தங்களுக்குள்ளேயே சமாதானப்பட்டு, தங்களின் அக்காள் பிள்ளையான ஆறுவயது ராமனைக் காட்டி "இந்தாங்க..." என்றார்கள்.

சொக்கலிங்கம் யோசித்தார். மைத்துனன்மார்கள், தனது திரண்ட சொத்துக்களைத் திரட்ட நினைத்தே, இப்படி உருப்படாத பிள்ளைகளைக் காட்டுவதுபோல் தோன்றியது. அதோடு, மறுமணம் என்ற யோசனையை யாரோ சொல்ல. இவரையே, "அடிப்போம்-பிடிப்போம்" என்ற பயல்கள். இவன்களிடம் தத்துகித்து எடுத்தால், அப்புறம் கழட்டிக்க முடியாது. ஜென்மாந்திர தண்டனைக்குச் சமமானது. அவருக்குத் தங்கையை கண்ணால் பார்க்காமல் இருக்க முடிந்ததே தவிர, உள்ளத்தால் நேசிக்காமல் இருக்க முடியவில்லை. அவளது இரண்டாவது மகளான இந்த மல்லிகா மீது அவருக்கு அளவற்ற பாசம் அவள் பிறந்த பிறகுதான், ஜோதிடர் ஒருவர் சொன்னதுபோல், தாய் மாமனான தனக்கு, யோகத்திற்குமேல் யோகம் அடிப்பதாக நம்பினார்.

எனவே, தங்கையின் வீட்டுக்குப் போய் மூன்று வயதுக்கேற்ற லாகவத்துடன், மான்குட்டி மாதிரி கவர்ச்சியாய், மீன்குட்டி மாதிரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/36&oldid=1133684" இலிருந்து மீள்விக்கப்பட்டது